கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? : தேனிலவில் நேர்ந்த அவலம்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (08:33 IST)
47 வயதான மோனிகா வலேரியா கொன்சால்வஸ் இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். பிரேசிலியாவில் சட்ட ஆலோசகராக பணிபுரியும் அவர் ஒரு நீதிபதியான கார்லோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
 

 
ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த அவர், அடிக்கடி விடுமுறையின்போது, பிரேசில் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு.
 
விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் பிரத்தியோக சமூக நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்லும் அவர், பிரேசிலின் சிறந்ததொரு சுற்றுப்புறத்தில் வசித்து வருகிறார்.
 
சுருக்கமாக சொன்னால், ஒரு சதவீத உயர் வகுப்புக்கு பிரேசிலிய சமூகம் அனுபவித்து வருவதற்கு இணையான வாழ்க்கையை பெற்றிருக்கிறவர். ஒரேயொரு வித்தியாசம். அவர் கறுப்பு நிறத்தவர். அவ்வளவு தான்.
 
கறுப்பு பிடித்த கலர் அல்ல:
 
சமூக நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவர் மட்டும் பெரும்பாலும் கறுப்பு இனத்தவராக இருப்பார். குறைந்தது வீட்டு வேலையாளாக இல்லாமல் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர் இவராகத்தான் இருப்பார்.
 
இத்தகைய நிகழ்வுகளுக்கு அவருடைய கணவருடன் சென்றால், மோனிகாவை கார்லோஸின் செயலராகத்தான் அனைவரும் எண்ணினர்.
 
“என்னை பற்றி தெரியாதவர் என்னை பற்றி தவறுதலாக பலவற்றைக் கூறுவர். கல்வி பயிலும் வட்டத்தில் கறுப்பு இனத்தவர் சுத்தம் செய்பவராக, கற்று கொடுப்பவராக அல்லது வரவேற்பாளராக பணிபுரிவதை பார்த்திருக்கிறேன். இதற்கு அப்பாற்பட்டு பணிபுரிபவரை பார்ப்பது அபூர்வம்” என்று மோனிகா விளக்குகிறார்.
 
கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி:
 
ஆனால், அவரை மிகவும் கெடூரமாக பாதித்த சம்பவம் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபோர்டோலிஸாவில் தேனிலவை கழித்தபோது நடைபெற்றது.
 
“ஒருவர் என்னை தொட்டு அழைத்தார், நான் பயந்து கூச்சலிட்டேன். பின்னர் அவர், ஒரு வெள்ளையருடன் விபச்சாரியாக இருப்பதாக நினைத்து அழைத்தேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
 

 
தனிப்பட்ட வருவாய் ஈட்டுகின்ற, சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கும் என்னை திருமணம் செய்திருக்கும் கணவர் அவர் என்று எண்ணுவதற்கு கூட அந்த நபருக்கு தோன்றவில்லை. அந்த இடத்தில் ஒரு கறுப்பினத்தவர் இருப்பது என்பதற்கு அவருடைய உள்ளத்தளவில் சாத்தியமில்லாத ஒன்று”
 
கடந்து வந்த கடினமான பாதை:
 
அவருடைய குடும்பத்தில் மோனிகா மட்டும்தான் கடும் முயற்சியால் சமூகத்தில் முன்னுக்கு வந்தவர். அதற்காக அவர் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
 
“என்னுடைய வாழ்க்கையில் நான் செய்வதில் எல்லாம் சிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது, என்னுடைய வேலையின் தரத்தாலும், தோலின் நிறத்தாலும் சீர்தூக்கி பார்க்கப்பட்டேன்” என்று கொன்சால்வஸ் அங்கலாய்க்கிறார்.
 
பணியில், கறுப்பின நீதிபதிகள் இருவரோடு மட்டுமே வழக்கறிஞர் சபையின் தலைவராக இருந்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை கறுப்பின நீதிபதிகள் மட்டுமே ஏற்று கொள்கிறார்கள். ஏன் இவ்வாறு நடைபெறுகிறது” என்று கேள்வி எழுப்புகிறார்.
 
அவருடைய சமூக தகுநிலை, சில சூழ்நிலைகளில் முன்சார்பு எண்ணங்களை குறைக்கிறது. சில இடங்களில் நல்லவிதமாக நடத்தப்பட்டும் இருக்கிறார்.
 
ஆனால், பிற இடங்களில் அவருடைய சமூக நிலை, பாகுபாடு காட்டுவதை மிகவும் மோசமாக்குகிறது.
 
கறுப்பர் பற்றி முன்சார்பு எண்ணம்:
 
“கடையிலுள்ள ஒரு பொருளின் விலையை கேட்டால், என்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல், அது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறுகின்றபோது அதிக முன்சார்பு எண்ணத்தை அந்த பதிலில் உணர்கிறேன்” என்கிறார்.
 
“அவர்கள் என்னை பற்றி எண்ணுவதை விட நான் நேர்மாறானவர் என்பதை காட்ட வேண்டும் என்று உணர்கிறேன்" என்கிறார்.
 
என்னவாகும் எதிர்காலம்?:
 
இந்த நாட்களில் எல்லாம் பிரேசிலில் பணக்காரர்கள் நடுவில் வாழ்கின்றவர்களில் ஒருவர் என்றெல்லாம் மோனிகா பெரிதாக எடுத்துகொள்வில்லை. ஆனால் எதிர்காலத்தை பற்றிய கவலை அவரை தொற்றியுள்ளது.
 
எட்டு வயதுப் பெண் குழந்தையின் தாயாக, மேம்பட்ட சமத்துவ சமூகத்தை பார்க்க அவர் விரும்புகிறார்.
 
அவருடைய மகள் லெட்டீசியா, ஒரு விதிவிலக்காக அவரை பார்க்கின்ற பாரம்பரியமான, இருமொழி வழி தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.
 
“அங்கு 200-க்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களில் என்னுடைய குழந்தையும், வீட்டில் வேலை செய்பவர் ஒருவரின் குழந்தையும் என இருவர் மட்டுமே கறுப்பினத்தவர்” என்று மோனிகா கூறுகின்றபோது அவருடைய வேதனையை உணர முடிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்