"என் மகனின் தந்தை யார் என தெரியாது": பாலியல் வல்லுறவுக்கு ஆளான ருவாண்டா பெண்ணின் வாழ்க்கை

சனி, 29 ஜூன் 2019 (19:01 IST)
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.


 
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஓர் பெண்ணின் 24 வயது மகன், தன்னுடைய பிறப்பு சூழ்நிலை பற்றி எப்படி அறிய வந்தார் என்பதை அவரே பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பாலியல் வல்லுறவு நிகழ்வு பற்றிய தகவலால் ஏற்படும் அவமானம் கருதி அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலை இப்போதும் நீடிக்கிறது.
 
ஆரம்பக் கல்வி முடியும்போது தரப்பட்ட படிவத்தில், பெற்றோரின் பெயர் கேட்கப்பட்டிருந்தபோதுதான், தன்னுடைய தந்தை யார் என்ற கேள்வி முதன்முதலில் தனக்கு எழுந்ததாக ஜீன் பியர்ரே கூறுகிறார்.
 
``எனக்கு அவரைத் தெரியாது - அவருடைய பெயர் எனக்குத் தெரியாது'' என்கிறார் அவர்.
 
வீட்டில் தந்தை இல்லாதிருப்பது அசாதாரணமானதல்ல. பல குழந்தைகளுக்கு தந்தை இல்லாதிருக்கலாம். 1994ல் ருவாண்டாவில் இனப் படுகொலையின்போது எட்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தங்களுடைய தந்தையின் பெயர் தெரிந்திருந்தது.
 
கிராமத்தில் முணுமுணுப்பது பற்றியும், தன்னை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆனால் இறுதியில் முழு உண்மையை அறிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆனது.


 
அவருடைய தாயார் கேரின் உறுதியுடன் கூறும் அந்தக் கதையை, ``உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாது.''
 
``அவர் வெவ்வேறு தகவல்களைக் கேள்விப்பட்டிருக்கிறார். வதந்திகளைக் கேட்டிருக்கிறார். நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை என் சமூகத்தில் எல்லோரும் அறிவார்கள். அதற்காக நான் எதுவும் செய்ய முடியாது'' என்று தாயார் விவரிக்கிறார்.
 
``தன்னுடைய தந்தை யார் என்று எனது மகன் கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் என்னை பாலியல் வல்லுறவு செய்த 100க்கும் மேற்பட்ட ஆண்களில், அவனுடைய தந்தை யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
என்னால் தப்பி ஓட முடியவில்லை'
1994ம் ஆண்டில் 100 நாட்கள் நடந்த படுகொலைகளின்போது நடந்த பாலியல் வல்லுறவு செயல்களால் பிறந்த குழந்தைகள் எத்தனை என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது.
 
இனமோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டுவதற்கு ஐ.நா. மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போருக்கான ஆயுதமாக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் சிரியா முதல் கொலம்பியா வரையும், கடந்த ஆண்டு காங்கோ மக்கள் குடியரசு முதல் மியான்மர் வரையும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.


 
அந்தக் கொடுமைகளில் இருந்து உயிர் தப்பியவர்கள், போரில் பாலியல் வன்முறையை ஒழிக்கும் ஐ.நா. தினத்தைக் குறிப்பிடும் வகையில் #EndRapeinWar என்ற ஹேஷ்டேக்-ஐ பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தங்கள் கதைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
 
ஆனால் அந்தக் கொடுமையான நிகழ்வுகள் பற்றி கால் நூற்றாண்டுக்குப் பிறகு நினைவுகூர்வது அவர்களுக்கு எளிதான விஷயமல்ல. கேரின் கதையை கேட்டால், தனது மகன் உண்மையை அறிந்து கொள்வதற்கான வயது வரும் வரை அவர் ஏன் காத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
முதன்முறையாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது கேரினுக்கும், இப்போது அவருடைய மகனுக்கு ஆகும் வயதுதான் இருக்கும். ஹுட்டு இனத்தவர்கள், ராணுவத்தினர் மற்றும் வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான லட்சக்கணக்கான டுட்சி இனப் பெண்களில் இவரும் ஒருவர்.
 
இனப்படுகொலை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. அவருடைய முகத்தின் இருபுறங்களிலும் கத்தியால் வெட்டுபட்ட காயங்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இப்போதும் கூட பேசும்போதும், சாப்பிடும்போதும் அதனால் அவர் சிரமப்படுகிறார்.


 
போராளியின் மனைவியாய் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி
“ரத்தத்தை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்
அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள், ஒரு காலத்தில் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த மக்கள். ஒரு பள்ளியில் தொடர்ச்சியாக தாங்கள் கொலை செய்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் உடல்களைப் போட்டு வைத்திருந்த பள்ளத்தின் அருகில் அவரை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.
 
ஆனால் அவளுடைய காயங்களால் வலி இருந்தபோதிலும், சாவதற்கு விரும்பவில்லை என்பதை கேரின் அறிந்திருந்தார். சில மணிநேரம் கழித்து ராணுவ வீரர்கள் குழுவினர் சிறிய மரக் கட்டைகள், தடிகளைக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்து, கற்பனை செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், சாவதற்கு விரும்பவில்லை என்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார்.
 
மற்றொரு குழுவினர் அவரைத் தாக்கியபோதும், உடல் முழுக்க கடித்தபோதும்தான், இனிமேலும் வாழக் கூடாது என்று அவள் முடிவு செய்தார்.
 
``அப்போது சீக்கிரம் செத்துவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். செத்துவிட வேண்டும் என்று பல முறை விரும்பினேன்.''
 


படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஆனால், கொடுமைகள் அப்போதுதான் ஆரம்பம் ஆகியிருந்தன. அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த மருத்துவமனையை சீக்கிரமே ஹுட்டு ராணுவம் கைப்பற்றியது.
 
``என்னால் தப்பி ஓட முடியவில்லை. உடலின் பல பாகங்களில் முறிவுகள் ஏற்பட்டிருந்தன'' என்றார் கேரின்.
 
என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பியவர்கள் எல்லோரும் அதை நிறைவேற்றிக் கொண்டார்கள். அவர்களில் யாருக்காவது சிறுநீர் கழிக்கத் தோன்றினால் என்னிடம் வந்து என் மீது சிறுநீர் கழித்தார்கள்.''
 
ருவாண்டா தேசபக்தி முன்னணியினரால் மருத்துவமனை விடுவிக்கப்பட்ட பிறகுதான், கேரினுக்குத் தேவையான சிகிச்சை கிடைத்தது. அவருடைய கிராமத்துக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பலவீனமாக, உடைந்துபோன நிலையில், ரத்தம் சொட்டும் நிலையில் இருந்தார் கேரி. ஆனால் உயிர் இருந்தது.
 
அவர் கருவுற்றிருக்கிறாள் என்பதை அறிந்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
 
``உடலில் சக்தியே இல்லாதபோது என்ன செய்வது என்று நான் கேட்டேன். என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.''
 
``குழந்தை பிறந்தபோது, என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. மகன் பிறந்திருக்கிறான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன நடந்தது என்பது பற்றியே எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தேன். குழந்தை பிறந்த பிறகு, பாசம் இல்லாவிட்டாலும் குழந்தையை நானே வைத்துக் கொண்டேன்.''
 
`கைவிடப்பட்ட குழந்தை'
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தக் கதை அல்லது இது மாதிரி கதைகள் ருவாண்டா முழுக்க உள்ள குழந்தைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளில் பல நூறு முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
 
``பாலியல் வல்லுறவு என்பது கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தும் விஷயம். பல நிகழ்வுகளில், பெண்களுக்குதான் அவமானம் சேர்கிறது, ஆண்களுக்கு அல்ல'' என்கிறார் உயிர் பிழைத்தவர்களுக்கான நிதியம் (Surf) அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சாம் முன்டெரேரே. இனப்படுகொலையின்போது பாலியல் வல்லுறவுகளால் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தாய்மாருக்கு கல்வி மற்றும் மன ரீதியில் ஆதரவு அளிக்கும் வகையில் ருவாண்டா அறக்கட்டளை திட்டங்களை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.
 
சில நேரங்களில், தங்களுக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாக குழந்தைகளை ஆதரவின்றி விட்டுவிடுமாறு தாய்மார்களை உறவினர்கள் வற்புறுத்தியிருக்கின்றனர் என்று அவர் விவரிக்கிறார். மற்ற சில நிகழ்வுகளில், இதனால் அவர்களுடைய திருமணங்கள் முறிந்து போயிருக்கின்றன.
 
பெண்கள் எப்போது ரகசியத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இதன் விளைவாக, ஜீன் பியர்ரேபோல படிவத்தை நிரப்பும்போது பலரும் தாங்கள் எப்போது கருவில் உருவானோம் என்பதை அறிந்து கொண்டார்கள்.
 
``இனப்படுகொலையைத் தொடர்ந்து அவர்கள் எப்படி பிறந்தார்கள் என்பதை இப்போது தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுகிறார்கள். ``உன்னுடைய தந்தை இனப்படுகொலையில் கொல்லப்பட்டுவிட்டார்'' என்று சொல்வது எளிதானது.
 
``ஆனால் குழந்தைகள் வளரும்போது, நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். அதனால் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.''
 
இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவரான தமிழரின் கதை
முள்ளிவாய்க்கால்: இலங்கைப் போரின் இறுதி சாட்சி
ஆண்டுகள் போகப்போக, உண்மையை சொல்லாமல், தங்கள் கதைகளைச் சொல்வதற்கான முறைகளை அவர்களுக்கு ருவாண்டா அறக்கட்டளை சொல்லித் தந்து உதவுகிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை சாம் ஒப்புக்கொள்கிறார்.
 
``விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும்'' என்று அவர் சொல்கிறார். தனது புதிய கணவரிடம் உண்மையை மறைத்துள்ள இளம்பெண் ஒருவரின் கதையை நினைவுபடுத்தி அவர் இவ்வாறு கூறுகிறார்.
 
அவருக்கு இது தெரிந்தால், திருமணத்தை பாதித்துவிடும் என்று அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.
 
கேரினைபோல, பல தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் தொடர்பை இழந்து நிற்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் முழுமையாக உணர முடியவில்லை.
 
``நாங்கள் நினைத்துப் பார்த்திராத பாதிப்புகள் அவை'' என்று முன்டெரேரே சுட்டிக்காட்டுகறார். ``இளைஞர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. சமூகத்தில் இணைந்து செயல்படுவதற்கு, நாமும் மற்றவர்களைப் போன்றவர்களே என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு, இயன்றவரை நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்'' என்கிறார் அவர்.
 
பிணைப்பின் மன அழுத்தம்
படத்தின் காப்புரிமைAFP
கடைசியில் ஜீன் பியர்ரேவிடம் கேரின் முழு கதையையும் சொல்லிவிட்டார். அவன் கருவில் உருவானது, பிறந்தது ஆகியவற்றை 19 அல்லது 20 வயதில் சொல்லிவிட்டார்.
 
அதை அவன் ஏற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் இப்போதும் தந்தை இருக்க வேண்டிய இடம் அவனுடைய வாழ்வில் காலியாகவே உள்ளதாக உணர்கிறான். ஆச்சர்யப்படும் வகையில், தன் தாயாரை தாக்கிய அந்த ஆணின் மீது அவனுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் அதை மன்னித்துவிடுவதற்கு கேரின் முடிவு செய்துவிட்டார்.
 
``அந்த நிகழ்வு பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு மிகவும் கொடூரமான அழுத்தத்தைத் தருவதாக இருந்தது. நீங்கள் மன்னித்துவிட்டால், நன்றாக இருப்பதாக உணர்வீர்கள்'' என்று அவர் கூறுகிறார். உண்மையும் அதுதான்.
 
``அந்த ஆள் மீது எனக்கு ஒருபோதும் கோபம் இல்லை'' என்கிறார் ஜீன் பியர்ரே. ``சில நேரங்களில் அவரைப் பற்றிய சிந்தனை எனக்கு வரும். வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, அவற்றைத் தீர்ப்பதற்கு, எனக்கு உதவி செய்வதற்கு தந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்'' என்கிறார் அவர்.
 
மெக்கானிக்காக பயிற்சி பெறுவதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறார். ஒரு நாள் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறார்.
 
எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதுதான் போதிய அளவுக்கு இல்லை என்றாலும் ``என் குடும்பத்துக்கு உதவிடவும் திட்டமிட்டிருக்கிறேன்'' என்று பியர்ரே கூறினான்.
 
கேரினை பொறுத்த வரையில், முதல்கட்டத்திலேயே அவருக்கு மனநல தேறுதல் வழங்கப்பட்டது. ஜீன் பியர்ரே வளரும்போது பிணைப்பை ஏற்படுத்த அது உதவியது. ``இவன் இப்போது என் மகன் என உணர்கிறேன்'' என்று கேரின் கூறுகிறார்.
 
சர்ப் அமைப்பின் உதவியுடன் வாங்கிய புதிய வீட்டின் கதவோரம் படியில் இருவரும் அமர்ந்து மலையின் பசுமையை கண்டு ரசித்துக் கொண்டிருப்பதில் இருந்து அவர்களுடைய நெருக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
 
அந்த இடம் கேரின் வளர்ந்த கிராமத்துக்கு வெளியே அமைந்திருக்கிறது. ஜீன் பியர்ரே-வை கைவிட்டுவிடுமாறு குடும்பத்தினர் கூறியபோது, வெளியேறி அந்தக் கிராமத்துக்கு அவன் சிறுவனாக இருந்தபோது பரிகசித்த அந்த கிராமத்துக்கு வெளியே அமைந்திருக்கிறது.
 
ஆனால், இப்போது விஷயங்கள் மறைந்துபோய்விட்டன. குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரால் ஏற்கப்பட்டுள்ளனர்.
 
``மன அழுத்தத்துடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்ததையும், இப்போது இங்கே மகிழ்வாக இருப்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர்'' என்று கூறினார் கேரின்.
 
ஜீன் பியர்ரே தனது தாயார் பற்றியும், அவர் சாதித்தது பற்றியும் பெருமைப்படுகிறார். ``இதைக் காண்பது மிகவும் கஷ்டம்தான். ஆனால் அவருடைய முன்னேற்றம் குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.
 
``நடந்தவற்றை அவர் ஏற்றுக் கொண்ட விஷயம், எதிர்காலம் பற்றிய அவருடைய சிந்தனை, அவருடைய அணுகுமுறை ஏற்புடையதுதான்'' என்கிறார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்