450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை - காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:02 IST)
பூஞ்சைகள் நிலத்துக்கு அடியில் தாவரங்களின் வேர்களுடன் வலையமைப்பை உருவாக்குகிறது. அவ்வமைப்பு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வதற்கும், பூமியை வெப்பமாக்கும் கார்பன் டை ஆக்ஸைடை மண்ணில் அடைத்து வைப்பதற்கும் உதவுகிறது.
 
பூஞ்சைகளின் இந்த மாபெரும் வலையமைப்பு குறித்தும், அவ்வமைப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அதன் பங்கு குறித்தும் அதிகம் அறியப்படவில்லை. இது வுட் வைட் வெப் என பிரபலமாக அறியப்படும் பகுதியாகும்.
 
இது நிலத்துக்கு அடியில், தாவர வேர்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையில் இருக்கும் வலையமைப்பு. இது மற்றவற்றுடன், மரங்கள் ஊட்டச்சத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.பூமியில் இதுவரை கவனிக்கப்படாத, நம் கால்களுக்கு அடியில் மண்ணின் கீழ் உள்ள பூஞ்சை வலையமைப்புகளை ஆராய ஒரு அறிவியல் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
 
"நிலத்தடி பாதுகாப்பு" குறித்து நீண்ட காலமாக கவனிக்கப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "இந்த பழங்கால வாழ்க்கை ஆதரவு அமைப்பை" பாதுகாப்பதற்கான "நிலத்தடி காலநிலை இயக்கத்தின்" தொடக்கமிது என ஆம்ஸ்டர்டாமில் உள்ள வியூபல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டோபி கியர்ஸ் கூறினார்.
 
பூஞ்சைகளைப் பற்றிய ஆய்வை மைகாலஜி என்பர். அச்சொல்லின் அடிப்படையில் தோன்றிய "மைக்கோநாட்ஸ்" (பூஞ்சைகளைக் குறித்து ஆராய்பவர்கள்) உள்ளூர் வல்லுநர்கள், பூஞ்சைகளின் ஹாட்ஸ்பாட்களின் உலகளாவிய வரைபடத்தைத் தொகுக்க, அடுத்த 18 மாதங்களில் 10,000 மாதிரிகளைச் சேகரிக்க உள்ளனர்.
 
பூஞ்சை வலையமைப்புகளின் செயல்பாடு குறித்த படத்தைக் கட்டமைக்க மற்றும் இவ்வமைப்புகள் கார்பன் சிங்க்குகளாகச் செயல்படுவது குறித்து ஆராய மிஷின் லெர்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஓர் அமைப்பு வெளியிடும் கார்பனை விட, அதிக கார்பனை உறிஞ்சினால் அதை கார்பன் சிங்க் என்கிறோம்.
 
விவசாய விரிவாக்கம், உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காடழிப்பு, நகரமயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக பூஞ்சை வலையமைப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
தற்போதைய மதிப்பீடுகளின் படி, பூஞ்சை வலையமைப்புகளின் உதவியுடன் மண்ணில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு ஐந்து பில்லியன் டன்கள் என்றும், இக்கணக்கீடு மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றன.
 
"இந்த மாபெரும் அமைப்பை நாம் இழந்தால், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் நமது திறனுக்கு மிகக் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்" என்று பேராசிரியர் கியர்ஸ் பிபிசி செய்தியிடம் கூறினார். பூஞ்சைகள் மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத சுற்றுச்சூழல் பொறியாளர்கள், அவற்றின் இழப்பு குறித்து முற்றிலும் ஆவணப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.
 
பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களிலும் 25 சதவீத உயிரினங்கள் மண்ணில் வாழ்கின்றன. இருப்பினும் நிலத்திற்கு மேலே உள்ள பல்லுயிர் பெருக்கப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான தற்போதைய திட்டங்கள், பூமிக்குக் கீழே உள்ள 50 சதவீத பல்லுயிர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன.
 
மண்ணின் முதல் 10 சென்டி மீட்டரில் உள்ள பூஞ்சை வலையமைப்புகளின் மொத்த நீளம் 450 குவாட்ரில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது பால்வெளியின் மொத்த அகலத்தில் பாதி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்