ஹம்ஸா யூசுப்: இன பாகுபாட்டிலிருந்து அதிகாரத்தின் உச்சிக்குச்சென்ற ஒரு தலைவரின் பயணம்

சனி, 1 ஏப்ரல் 2023 (22:20 IST)
ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்என்பி) புதிய தலைவராக ஹம்ஸா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிக்கோலா ஸ்டர்ஜனின் இடத்தில் ஸ்காட்லாந்தின் அடுத்த ஃபர்ஸ்ட் மினிஸ்டராக (தலைமை அமைச்சர்) பதவியேற்பார்.
 
ஹம்ஸா யூசுப் ஆரம்பத்திலிருந்தே இந்தப்பதவிக்கான போட்டியில் வலுவான வேட்பாளராக இருந்தார். நிக்கோலா ஸ்டர்ஜன் உட்பட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். பதவியேற்றதும் விரைவில் அவர் அமைச்சரவையை அறிவிப்பார்.
 
இந்தத் தேர்தலில் சுகாதார அமைச்சர் ஹம்ஸா யூசுப், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் மட்டுமின்றி, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்றார்.
 
ஹம்ஸா யூசுப் 'ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை சரியான முடிவுக்கு கொண்டு செல்வார்' என்று துணைத் தலைமை அமைச்சர் ஜான் ஸ்வின்னி ஆரூடம் கூறியிருந்தார்.
 
தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் ஹம்ஸா யூசுப் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
 
2012ஆம் ஆண்டு முதல் அரசில் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். நீதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவிகளும் இவற்றில் அடங்கும்.
 
அவர் சிறந்த பேச்சாளர். எனவே, தலைமைக்கான கடும் போராட்டத்திற்குப் பிறகு கட்சியை ஒருங்கிணைத்து, ஸ்காட்லாந்து பசுமைக் கட்சியுடன் அதிகாரப் பகிர்வுக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்ல அவர் மிகவும் பொருத்தமான தலைவர் என்று ஹம்ஸாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஹம்ஸா யூசுப் நிக்கோலா ஸ்டர்ஜனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளார். மேலும் நிக்கோலா ஸ்டர்ஜனின் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொடர்ச்சி வேட்பாளராக அவர் கருதப்படுகிறார்.
 
நீதிமன்றங்களில் பாலின அடையாளத்தை சீர்திருத்தும் ஸ்டர்ஜனின் சர்ச்சைக்குரிய முன்மொழிவின் மீதான பிரிட்டிஷ் அரசின் தடையை முறியடிக்க பணியாற்றப்போவதாக, தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் அவர் மட்டுமே கூறினார்.
 
தனது கட்சி தொடர்ந்து 'முற்போக்கு விழுமியங்களை' ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே ஸ்காட்லாந்து சுதந்திரத்தை அடைய முடியும் என்று ஹம்ஸா யூசுப் வாதிட்டார்.
 
தடையை நீக்குவதற்கான சவாலில் வெற்றி கிடைக்கும் என்று தனது சட்ட ஆலோசகர்கள் உறுதியளித்தால் மட்டுமே நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஹம்ஸா வலியுறுத்தினார்.
 
அடுத்த தேர்தலை சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பாக மாற்றும் நிக்கோலா ஸ்டர்ஜனின் திட்டத்தில் இருந்து ஹம்ஸா யூசுப் விலகி, அதற்கு பதிலாக சுதந்திரத்திற்கு ஆதரவாக "நிலையான பெரும்பான்மையை" உருவாக்கப்போவதாக கூறினார். மேலும், 'சுதந்திரத்தை ஆதரிக்க 50 முதல் 51 சதவிகித வாக்குகள் போதாது' என்றும் அவர் கூறினார்.
 
இருப்பினும் ஹம்ஸா யூசுப், சுதந்திரத்தை அடையத் துடிக்கும் பிரிவினரையும் கவர முயன்றார். இதற்காக பிரிட்டனிடமிருந்து பிரிந்து செல்வதற்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதை அறிய, இடைக்காலத் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக ஹம்ஸா கூறியிருந்தார்.
 
தலைமைப் போட்டியில் ஹம்ஸா வெற்றி பெறுவதற்கு கட்சித் தலைவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்ற கூற்றையும் ஹம்ஸா யூசுப் நிராகரித்திருந்தார்.
 
தேர்தல் பிரசாரத்தின் நாட்கள் குறைக்கப்பட்டபோது ஹம்ஸா இந்த தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியிருந்தது, இவை அனைத்தும் அவருக்கு சாதகமாக செய்யப்பட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.
 
மேலும் புதிய தேசிய பராமரிப்பு சேவையை அறிமுகப்படுத்துதல் மற்றும் ’பாட்டில் திரும்பப் பெறும்’ முன்மொழிவுகள் போன்ற சர்ச்சைக்குரிய கொள்கைகள் குறித்த மக்களின் கவலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதாகவும் ஹம்ஸா கூறினார்.
 
ஹம்ஸா யூசுப் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிபிசி ஸ்காட்லாந்தின் ஞாயிறு நிகழ்ச்சியில் தோன்றினார். தான் யாருடைய கைப்பாவை வேட்பாளரும் அல்ல என்றும், வெற்றி பெற்றால் 'என் வழியில் செயல்படுவேன்' என்றும் அவர் வலியுறுத்தினார். தலைமை அமைச்சராக நிக்கோலா ஸ்டர்ஜன் செய்த அற்புதமான பணியை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் கூறினார்.
 
”ஆனால் அவரது தலைமைத்துவ அணுகுமுறை குறிப்பிட்ட சிலருடன் செல்வதாக இருந்தது. என்னைச்சுற்றி சிலர் மட்டுமே இருப்பதை தவிர்த்து, என்னுடன் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பேன்,” என்றார் ஹம்ஸா யூசுப்.
 
ஹம்ஸா யூசுப் நீண்ட காலமாக அரசியலில் இருந்த போதிலும், அவரது சாதனைகள் என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
லேபர் கட்சியின் ஜாக்கி பெய்லி, ஹம்ஸா யூசுப்பை 'வரலாற்றில் மிக மோசமான சுகாதார அமைச்சர்' என்று வர்ணித்தார். கூடவே ’இப்போது ஹம்ஸா மிக மோசமான ஃபர்ஸ்ட் மினிஸ்டராக ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்' என்றும் கூறினார்.
 
இருப்பினும், ஹம்ஸா யூசுஃப் மீதான வலுவான விமர்சனத்தை அவரது கட்சியான ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் கேட் ஃபோர்ப்ஸ் வழங்கினார். தொலைக்காட்சியில் நேரடி விவாதத்தின் போது, கேட் ஹம்ஸாவிடம், 'நீங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, ரயில்கள் சரியான நேரத்தில் வரவில்லை. நீங்கள் நீதியமைச்சராக இருந்தபோது, காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகமானது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக நீங்கள் இருக்கும்போது நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் சாதனை அளவை எட்டியிருப்பதை பார்க்கிறோம்,”என்றார்.
 
தலைமைப் போட்டியின்போது ஹம்ஸா யூசுப் மற்றும் கேட் ஃபோர்ப்ஸ் மோதல் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. ஓரினச்சேர்க்கை திருமணம், திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளில் தனது போட்டி வேட்பாளரின் கருத்துக்களை பார்க்கும்போது, அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சி 'வலது சாரியாக ஆகிவிடும்' என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஹம்ஸா யூசுப் கூறினார்.
 
இருப்பினும் 2014 இல் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதற்கான கடைசி வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியையும், ஹம்ஸா யூசுப் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்காட்லாந்து குடிமகன் தொடர்பான முக்கியமான கூட்டத்தில் தான் பிஸியாக இருந்ததாகவும் அதனால் தான் அந்த வாக்கெடுப்பில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஹம்ஸா தனது வாதத்தில் கூறியிருந்தார்.
 
இருப்பினும், கிளாஸ்கோ மசூதி அழுத்தம் கொடுத்ததால் ஹம்ஸா யூசுப் ஒரே பாலின திருமண வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று அந்த நேரத்தில் ஸ்காட்லாந்தின் ஃபர்ஸ்ட் மினிஸ்டராக இருந்த அலெக்ஸ் சால்மண்ட், ஸ்கை நியூஸிடம் கூறினார். எனினும், இந்த குற்றச்சாட்டை ஹம்ஸா யூசுப் கடுமையாக மறுத்து வருகிறார்.
 
பிரிட்டனின் ஒரு பெரிய கட்சியின் முதல் முஸ்லிம் தலைவர்
37 வயதான ஹம்ஸா யூசுப், ஃபர்ஸ்ட் மினிஸ்டராவது உறுதி செய்யப்பட்டால், அவர் பதவி வகிக்கும் சுயாட்சி அரசின் முதல் சிறுபான்மை இனத் தலைவராகவும், பிரிட்டனின் ஒரு பெரிய கட்சியின் முதல் முஸ்லிம் தலைவராகவும் ஆவார்.
 
ஹம்ஸாவின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர். 1960களில் குடும்பத்துடன் ஸ்காட்லாந்தில் குடியேறியவர் அவர். ஹம்ஸாவின் தாயார் கென்யாவில் தெற்காசிய குடும்பத்தில் பிறந்தவர். ஹம்ஸா யூசுப், தான் எப்படி இனவாத அவதூறுகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அடிக்கடி கூறுகிறார்.
 
தலைமைப் போட்டி தொடங்கிய பிறகு, அவருக்கு அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியபோது, ஹம்ஸா காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது. இவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் ஒரு 25 வயது ஆணும், 35 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
 
ஹம்ஸா யூசுப் தனது ஆரம்பப் படிப்பை கிளாஸ்கோவில் உள்ள ஹட்ச்சன்ஸ் கிராமர் பள்ளியில் பயின்றார். அந்தப் பள்ளியில், ஸ்காட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைவரான அன்சார் சர்வாரை விட ஹம்ஸா இரண்டு ஆண்டுகள் ஜூனியராக இருந்தார்.
 
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்த பிறகு ஹம்ஸா சிறிது காலம் கால் சென்டரில் பணியாற்றினார். பின்னர் அவர் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் உறுப்பினரான பஷீர் அகமதின் நாடாளுமன்ற உதவியாளரானார். பின்னர் அலெக்ஸ் சால்மண்டின் உதவியாளராகவும் ஆனார்.
 
2011 இல் ஹம்ஸா, கிளாஸ்கோ தொகுதிக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். அலெக்ஸ் சால்மண்ட் ஒரு வருடம் கழித்து அவருக்கு பதவி உயர்வு அளித்து அவரை ஐரோப்பா மற்றும் சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சராக்கினார்.
 
2016 இல், தொழிலாளர் கட்சி டிக்கெட்டில் கிளாஸ்கோவின் பொல்லாக் தொகுதியில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஹம்ஸா போக்குவரத்து அமைச்சரானார். தேர்தலில் வெற்றி பெற்ற ஹம்ஸா, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தை அடைந்த முதல் சிறுபான்மை இன வேட்பாளர் ஆவார்.
 
பலமுறை விமர்சனங்களை சந்தித்த ஹம்ஸா
போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்சூரன்ஸ் செய்யப்படாத தனது நண்பரின் காரை ஓட்டிச் சென்ற ஹம்ஸா யூசுப், போலீசாரிடம் சிக்கினார். ஹம்ஸா 300 பவுண்டுகள் அபராதம் செலுத்தும் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது உரிமத்தில் ஆறு பெனால்டி புள்ளிகள் சேர்க்கப்பட்டன.
 
ஹம்ஸா யூசுப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, ஸ்காட் ரெயிலின் மோசமான செயல்பாட்டிற்காகவும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். அந்த நேரத்தில் அதை இயக்குவதற்கான ஒப்பந்தம் அபெல்லோவிடம் இருந்தது. இறுதியில் ஸ்காட்ரெயில் தேசியமயமாக்கப்பட்டது.
 
2018 ஆம் ஆண்டில், நிக்கோலா ஸ்டர்ஜன் தனது அமைச்சரவையை மாற்றியமைத்து அவரை புதிய நீதி அமைச்சராக நியமித்தபோது ஹம்சா யூசுஃப் மற்றொரு பதவி உயர்வு பெற்றார்.
 
ஆனால் வெறுப்புக் குற்றங்களைத் தடுப்பதற்கான அவரது முதல் மசோதா சர்ச்சையில் சிக்கியது. 'வெறுப்பைத் தூண்டுவது' என்ற பெயரிலான இந்தப் புதிய குற்றம், கருத்துச் சுதந்திரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த மசோதா குறித்து அச்சம் வெளியிடப்பட்டது.
 
சர்ச்சைக்குரிய புத்தகங்களை வைத்திருப்பதற்கான வழக்குகளை நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகள் எதிர்கொள்ளக்கூடும் என்றும், மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் ஒருவருக்கொருவர் பேசுவதைக் கூட புதிய சட்டம் குற்றமாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
'நவீன காலத்தில் பிரிட்டனின் எந்தப் பகுதியிலும் அரசு கொண்டு வந்துள்ளவற்றில் மிகக் கொடிய மற்றும் ஆபத்தான சட்டம் இது' என்று இந்த மசோதா குறித்து ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜிம் சில்லார்ஸ், கூறியிருந்தார்.
 
பல மாற்றங்களுக்குப் பிறகு, இறுதியாக 2021 இல், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த மசோதா இன்னும் சட்டமாக அமல்படுத்தப்படவில்லை.
 
ஹம்ஸா யூசுப் ஒரு ட்வீட்டிற்காகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 'மிகவும் மோசமானது' என்று அவர் ஒரு வீடியோவை ட்வீட் செய்திருந்தார். அந்த வீடியோவில் ரேஞ்சர்ஸ் வீரர்கள் சாதி வெறி மொழியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோ போலியானது என்பது பின்னர் தெரியவந்தது.
 
டன்டீ நகருக்கு அருகில் உள்ள ப்ரெளட்டி ஃபெர்ரி காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, ஸ்காட்டிஷ் போலீஸ் கட்டிடங்கள் பற்றிய கவலைகளை ஹம்ஸா நிராகரித்தார். இதற்கும் அவர் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த பகுதியில் தங்க சமீபத்தில் ஹம்ஸா யூசுப் வந்திருந்தார்.
 
2021 மே மாதம் சுகாதார அமைச்சராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள், 10 குழந்தைகள் கோவிட்-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொய்யாகக் கூறி 'தேவையற்ற பீதியை உருவாக்கியதற்காக' ஹம்ஸா யூசுப் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது.
 
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஹம்ஸா யூசுப் ஸ்கூட்டர் ஓட்டும் போது தவறி விழுந்தது குறித்தும் அதிகம் விவாதிக்கப்பட்டது. பேட்மிண்டன் விளையாடும் போது, காலில் காயம் ஏற்பட்டதால் ஹம்ஸா, பார்லிமென்ட் வளாகத்தில் ஸ்கூட்டர் ஓட்டி வந்தார்.
 
பிபிசி ஸ்காட்லாந்து அரசியல் ஆசிரியர் க்ளென் காம்ப்பெல் ஹம்ஸா ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வீடியோவை ட்வீட் செய்தார். அதற்கு பதிலளித்த ஹம்ஸா யூசுப், 'பிளாஸ்டரில் இருக்கும் வேறு ஒரு நபர் ஸ்கூட்டர் அல்லது சக்கர நாற்காலியில் இருந்து விழுந்திருந்தால், அந்த வீடியோவை நீங்கள் ட்வீட்டில் வெளியிடுவீர்களா?,” என்று கேட்டிருந்தார்.
 
சுகாதார அமைச்சராக ஹம்ஸா பதவி வகித்த காலம், மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தின் பெரும் அதிகரிப்புக்காக நினைவுகூரப்படுகிறது. இந்த பிரச்சனை ஸ்காட்லாந்திற்கானது மட்டும் இல்லை என்று அப்போது அவர் கூறினார்.
 
ஹம்ஸா யூசுப்பின் ஆதரவாளர்களில் ஸ்டீபன் ஃப்ளைன் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவர் ஜான் ஸ்வின்னி ஆகியோரும் அடங்குவர். ஹம்சாவின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஹம்ஸா போக்குவரத்துப் பொறுப்பில் இருந்தபோது, அவர் குயின்ஸ்பெர்ரி நான்குசாலை சந்திப்பை சரியான நேரத்தில் திட்டமிட்ட தொகைக்குள்ளேயே முடித்தார் என்று தெரிவித்தனர். மேலும் அவர் நீதி அமைச்சராக இருந்த காலத்தில் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
 
நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிறந்த நபர் ஹம்ஸா என்று தான் உறுதியாக நம்புவதாக ஸ்டீபன் ஃப்ளைன் கூறுகிறார். ஒன்று மற்றும் இரண்டு வயது குழந்தைகளின் பராமரிப்புத் திட்டத்தை நீட்டிக்கும் ஹம்ஸாவின் யோசனையையும் அவர் பாராட்டினார், 'இந்தத் திட்டம் உழைக்கும் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஸ்காட்டிஷ் பொருளாதாரத்திற்கும் உண்மையான கேம்சேஞ்சராக இருக்கும்' என்று அவர் கூறினார்.
 
'நர்சரி பள்ளியின் பாகுபாடு குறித்த சர்ச்சை'
ஹம்சா யூச்ஃப், பாகிஸ்தான்
ஹம்ஸா யூசுப் மற்றும் டண்டீயின் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி கவுன்சிலரான அவரது மனைவி, நாதியா அல்-நகாலா, சமீபத்தில் ஒரு நர்சரி பள்ளிக்கு எதிரான 30,000 பவுண்ட் இழப்பீட்டு கோரிக்கையை கைவிட்டனர். நர்சரி பள்ளியில் பாகுபாடு காட்டப்படுவதாக இருவரும் குற்றம் சாட்டினர்.
 
ப்ரெளட் ஃபெரியில் உள்ள அந்த நர்சரி பள்ளியில் தங்கள் மகளுக்கு இடமில்லை என்று நர்சரி கூறியதாக இருவரும் குற்றம்சாட்டினர். ஆயினும் 'வெள்ளையின மற்றும் ஸ்காட்டிஷ் போல ஒலிக்கும் பெயர்கள்' கொண்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இது முற்றிலும் தவறானது என்று நர்சரி கூறியுள்ளது. ஒரு சிறிய நர்சரிக்கு எதிரான இந்தப்பொய்யான குர்றச்சாட்டு காரணமாக ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவழிக்க நேர்ந்ததாகவும் நர்சரி கூறியது.
 
முன்னதாக இந்த நர்சரிக்கு எதிராக ஹம்ஸா யூசுப் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த புகாரை கேர் இன்ஸ்பெக்டரேட் உறுதி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்