எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் தேதிக்குப் பின் கொழும்பு - காலி முகத்திடலை பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வோரை கலைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
இது தொடர்பில் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடன் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு, மேல் மாகாண மூத்த பிரதி போலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனாதிபதி செயலக பிரதான வாயிலை மறித்து கூடியிருக்கும் போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் இந்த அவதானம் திரும்பியுள்ளது.
குறிப்பாக தற்போது, கோட்டா கோ எனும் பெயரில், காலி முகத்திடலை அண்மித்து கூடாரங்கள் பல அமைக்கப்பட்டு மாதிரிக் கிராமம் ஒன்றே போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகள் இரவு பகலாக தொடரும் நிலையில், போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றும் தேவை உருவாகியுள்ளதுடன், அதைக் கையாள போதுமான உத்திகள் தொடர்பில் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டக் காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதனை மையபப்டுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது, போராட்டக் காரர்களின் கூடாரங்கலுக்குள் போதைப் பொருட்களை வைத்து அதனை மையப்படுத்தி அவர்களைக் கைது செய்வதன் ஊடாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கட்டி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.
16ஆம் தேதி காலை போலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் போராட்டப் பகுதியை மையப்படுத்தி நிலை கொள்ளச் செய்யப்பட்ட போதும், பின்னர் பரவலான எதிர்ப்புக்களை அடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து பின்நோக்கி நகர்த்தப்பட்டு வேறு இடத்தில் நிலைக்கொள்ளச் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
களத்தில் இணையும் கத்தோலிக்க திருச்சபை
இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை முழு ஆதரவை அளிப்பதாக ஐலேண்ட் நாளிதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரி இலங்கை காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளரான சிரில் கமினி ஃபெர்ணண்டோ, தங்களது முழு ஆதரவை இந்த போராட்டத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிஷப் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கத்தோலிக்க திருச்சபையும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று எதிரார்க்கிறது என்று தெரிவித்தார். மேலும், ஏற்கனவே திருச்சபையினர் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதன் மூலம், முன்பிருந்தே இந்த போராட்டத்தில் திருச்சபை பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று ஐலேண்ட் செய்தி தெரிவிக்கிறது.
அமைதியான போராட்டம் இது
அமைதியான போராட்டங்களை அரசு குலைக்க முயற்சிப்பது உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாக சிலோன் டுடே இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தில் இடையூறு விளைவிப்பது, அரசமைப்பால் குடிமக்களுக்கு வழங்கபட்டுள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் விதிமீறலான செயல் என்று, இலங்கை அரசுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாபு வழங்கப்பட்டுள்ள ஒரு அமைதியான கூட்டத்தை, சட்டவிரோதமாக ஒடுக்குவது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்தான்.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கும்படி, அரசை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று சிலோன் டுடே செய்தி தெரிவித்துள்ளது.