இன்று முதல் கொழும்பில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:36 IST)
கொழும்பு - காலி முகத்திடலில் 7வது நாளாக தொடரும் தன்னெழுச்சிப் போராட்டத்தில், இன்று முதல் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளார். 24 மணிநேர உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரசாத் அறிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை நியாயத்திற்கான நடைபவணி என்ற பெயரில் கட்டுவாபிட்டிய தேவாலயத்திலிருந்து, கொச்சிகடை தேவாலயம் வரை நடந்து வருகைத் தந்தேன். 38 கிலோமீட்டர் தூரத்தை 12 மணித்தியாலங்களில் வந்தடைந்தேன்.
 
இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த நடைபவணியை ஆரம்பித்தேன். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 வருடங்கள் ஆகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலில் உயிரிழந்த 268 பேருக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அதற்கு நியாயத்தை கோரியே வருகைத் தந்தேன்.
 
அதேபோன்று, நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை கோரியே அந்த நடைபவனியை ஆரம்பித்தேன். இந்த இடத்திற்கு வருகைத் தருவதற்கும் அந்த இரண்டு விடயங்களே காரணம். அதுமாத்திரமன்றி, இளைஞர்களும் காரணமாக இருக்கின்றனர். பல நாட்களாக இந்த இடத்திலிருந்து நியாயத்திற்காக போராடி வருகின்றனர்.
 
கிரிக்கெட் வீரர் என்ற விதத்தில் முன்னோக்கி சென்ற எனக்கு, இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தோன்றியது. விரைவில் நியாயம் கிடைக்கும் என நம்புகின்றேன்" என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்