கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள்: அமெரிக்க அரசியல் புயலில் சிக்கிக்கொண்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

வியாழன், 30 ஜூலை 2020 (14:58 IST)
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகியவற்றின் தலைவர்கள் வாஷிங்டன் சட்ட உறுப்பினர்கள் முன்பு ஆஜராகினர்.

பெரும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகமாக்கி, தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படும் நிலையில், இவர்கள் ஆஜராகி உள்ளனர்.
இந்த பெரு நிறுவனங்களை உடைக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பர்க், அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோர் தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தினர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?

யெல்ப் போன்ற சிறு நிறுவனங்களிடம் இருந்து தரவுகள் மற்றும் உள்ளடகங்களை திருடுவதாக கூகுள் மீது சட்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனால், பயணாளர்கள் வேறு தளங்களுக்கு செல்லாமல், தங்கள் தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் நினைப்பதாக கூறப்படுகிறது.

அமேசானில் விற்பனையாளர்களை நடத்தும் விதம், இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்களை ஃபேஸ்புக் வாங்கியது, ஆப்பிள் ஆப் ஸ்டோர் விவகாரம் என இந்நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையில் வைக்கப்பட்டன.

இந்த பெரும் நிறுவனங்கள் போட்டிபோடும் விதம் அல்லது போட்டியாளர்களை நடத்தும் விதம் குறித்து ஜனநாயகவாதிகள் பேச, இவர்கள் தரவுகளை எப்படி கையாள்கிறார்கள் என்பது குறித்த கவலையை குடியரசு கட்சியினர் வெளியிட்டனர்.

அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்தும் இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் ஜனநாயகவாதி டேவிட் சிசிலின் கூறுகையில், ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆன்லைன் தளங்கள் "தங்கள் நிறுவனத்தை விரிவாக்க எவ்வாறு தங்கள் அதிகாரத்தை தீய வழிகளில் பயன்படுத்தினார்கள் என்பது தெரிய வந்துள்ளது" என்றார்.

இந்நிறுவனங்கள் ஏகாதிபத்ய போக்கோடு செயல்பட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"சில நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்" என்று தனது 5 மணி நேர சாட்சியத்தின் இறுதியில் டேவிட் குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் பதில் என்ன?

காணொளி மூலமாக ஆஜராகிய இந்நிறுவனங்களின் அதிகாரிகள், தங்கள் நிறுவனமானது சிறு தொழில்கள் வளர உதவியாக இருந்ததாகவும், ஆரோக்கியமான போட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

"ஸ்மார்ட்போன் தொழில்சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. பங்கு சந்தைகளுக்காக தெருவில் இறங்கி சண்டை போடுவதுபோல உள்ளது என்று நான் இதை விவரிப்பேன்" என்று தற்போதைய தொழில் சூழல் குறித்து ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து பேசிய அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், ஒருசில குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், தளத்தில் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை தரவை கையாளுவதை நிறுவனம் மதிப்பாய்வு செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார்

அத்தரவுகளை வைத்து நன்றாக விற்பனையாகும் பொருட்களை அமேசானே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தனி நிறுவனங்களின் விற்பனை தரவுகளை பார்க்க அமேசான் விதிகள்படி அனுமதி கிடையாது என்றும், ஆனால், அதனை மீறி சிலர் பார்த்திருக்க வாய்ப்புள்ளதாகவும் ஜெப் பெசோஸ் தெரிவித்தார்.

"நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

பெரும் நிறுவனங்கள் இந்த உலகிற்கு தேவையான ஒன்று. சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் எப்படி தேவையோ அதே போன்று பெரிய நிறுவனங்களும் தேவை என்று அவர் தெரிவித்தார்.

உலகிலேயே பணக்கார நபரான ஜெஃப் பெசோஸ் அவைக்கு முன் சாட்சியம் அளித்தது இதுவே முதல் முறையாகும்.

மேலும், உலகின் 4 பெரும் நிறுவனங்களின் தலைவர்களும் விசாரணையில் ஒன்றாக இதுவரை கலந்து கொண்டதில்லை.

அரசியல்வாதிகள் பலரும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஒப்புக்கொண்டாலும், தற்போது அவர்கள் எந்த ஒரு முடிவெடுக்கும் வாய்ப்பில்லை என பிபிசியின் தென் அமெரிக்க செய்தியாளரான அந்தோனி சுச்சர் தெரிவிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்