ஜெயலலிதாவுக்கு சொந்தமான நான்கு வீடுகள் முடக்கம் : வருமான வரித்துறை

வியாழன், 25 ஏப்ரல் 2019 (21:31 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு உள்ளிட்ட அவரின் நான்கு வீடுகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் அவரின் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்கக் கோரும் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாய்வழிச் செய்தியாக கூறிய விவரங்களை ஆவணங்களாக சமர்ப்பித்தனர் என மனுதாரர் புகழேந்தியின் வழக்கறிஞர் நந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, ஜெயலலிதாவிற்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது என்றும், அதில் 10.47 கோடி ரூபாய் பணமாக வங்கி கணக்குகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் 42.25 லட்சம் ரூபாய் வாகனங்கள், படகு, விமானம் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இவை அனைத்தும் 2016-2017 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குப்படி பதிவான சொத்து விவரம் ஆகும்.
 
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், 1990-91 முதல் 2011-12 நிதி ஆண்டுகளில் ரூ.10.12 கோடி செல்வ வரியை செலுத்தவில்லை என்றும் 2005-06 முதல் 2011-12 நிதி ஆண்டுகளில் 6.62 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ஆவணங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ததால், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூன் 6ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் சுந்தரேசன் மற்றும் சரவணன் தெரிவித்தனர் என வழக்கறிஞர் நந்தகுமார் கூறினார்.
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்