அல்ஜீரிய முன்னாள் அதிபர் அப்தெலாசீஸ் பொதெஃப்லிகா காலமானார்

சனி, 18 செப்டம்பர் 2021 (10:53 IST)
அல்ஜீரியாவின் அரசியலில் ஆறு தசாப்தங்களாக பல பொறுப்புகளில் செயல்பட்டு வந்த மற்றும் நீண்ட காலம் அல்ஜீரிய அதிபராக இருந்த அப்தெலாசீஸ் பொதெஃப்லிகா காலமானார்.1999ஆம் ஆண்டு முதல் 2019 வரை 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவின் அதிபராக இருந்தவர் அப்தெலாசீஸ். 

1937 மார்ச் 2ஆம் தேதி மொராக்கோவில் அல்ஜீரிய பெற்றோர்களுக்குப் பிறந்த அப்தெலாசீஸ், சிறு வயதிலேயே நன்கு படிக்கக் கூடியவராக இருந்தார். 19 வயதில் தேசிய விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார். அது பிரான்சிடமிருந்து அல்ஜீரியாவை சுதந்திரமடையச் செய்ய போராடி வந்த தேசிய விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் ராணுவ பிரிவு. 1962ஆம் ஆண்டு வரை ராணுவத்தில் உயர் பொறுப்புகளை வகித்தார். 
 
1963ஆம் ஆண்டு உலகிலேயே மிக இளம் வயது வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. இன்றுவரை இந்த சாதனை எந்த நாடாலும் முறியடிக்கப்படவில்லை. 
 
1974 - 75 காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராகவும் பதவியிலிருந்தார். இவர் பதவியில் இருந்த போது தான், பாலத்தீன தலைவர் யாசர் அராஃபத் ஐநாவில் பேச அழைக்கப்பட்டார். 
 
1978ஆம் ஆண்டு ஹொரி பொமெடின் நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்தெலாசீஸ் தன் அரசியல் தளத்தை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார்.பல்வேறு அரசியல் பிரச்சனைகள், உள்நாட்டுப் போர் எல்லாம் கடந்து 1999ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரம் அவர் கைக்கு வந்தது. 
 
2004ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2008ஆம் ஆண்டு ஒரு நபர் இருமுறை மட்டுமே அதிபர் பதவிக்கு வரமுடியும் என்கிற அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினார். அப்தெலாசீஸின் கடைசி இரு ஆட்சிக் காலங்கள் அவருக்கு அத்தனை இனிதாக அமையவில்லை. நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள், உடல் ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டார். 
 
2013ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் நிற்க விரும்பினார். 
 
அல்ஜீரிய வரலாற்றில் இல்லாத அளவுக்கு அப்தெலாசீஸுக்கு எதிர்ப்பு வந்தது.கடுமையான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக 2019 ஏப்ரல் 2ஆம் தேதி அப்தெலாசீஸ் தன் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு பெரும்பாலும் உடல் நலக்கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் அல்ஜீரிய தலைவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் எல் அலியா கல்லறையில் புதைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்