வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்”
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:27 IST)
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார்.
வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார்.
அப்போது பேசிய அவர், "நமது அண்டை நாடு இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை நமக்கு அவர்களால் சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்த வேண்டும்." என்றார்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், "பேச்சுவார்த்தையைத் தொடங்க பயங்கரவாதத்துக்கு எதிராகப் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
மேலும் அவர், "எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஆகிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு உலக அரங்கில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது." என்றார்.
`இந்தியாவும் பாகிஸ்தானும் வேண்டாம்` - போராடும் மக்கள்
உள்விவகாரம்
அரசமைப்பு சட்டம் பிரிவு 370 என்பது இந்தியாவின் உள்விவகாரம். பிறர் என்ன பேசுவார்கள் என அதிகம் கவலைகொள்ள வேண்டியதில்லை என்றார்.
அவர், "அரசமைப்பு சட்டம் பிரிவு 370 என்பது தற்காலிகமானது. தற்காலிகமான எதுவொன்றும் இறுதியில் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்" என்று தெரிவித்தார்.
"100 நாட்களில் இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக தேசப் பாதுகாப்பு இலக்குகளுக்கும் வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே கூறுவேன்.” என்றார் ஜெய்சங்கர்.
இந்தியா - அமெரிக்கா
இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மிக ஆரோக்கியமாக உள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வணிக வரி தொடர்பான முரண்பாடுகள் வளர்ந்து வருகின்றன.
எந்த உறவுக்குள்ளும் பிரச்சனைகள் வரும். இது போன்ற சிறிய பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது" என்று அவர் கூறினார்.