ஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள்
திங்கள், 27 செப்டம்பர் 2021 (10:38 IST)
ஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள்
ஐ.நா அவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய வெளியுறவு அதிகாரி சினேகா தூபே பேசிய காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல, பாகிஸ்தான் சார்பில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அதிகாரி சைமா சலீமின் காணொளியும் வைரலாகி வருகிறது.
சர்வதேச மன்றங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வதும் பிறகு அந்த நாடுகளின் பிரதிநிதிகள் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இம்முறை, அத்தகைய குற்றச்சாட்டை சுமத்திய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதில் அளிக்கும் வகையில் தமது நுனிநாக்கு ஆங்கிலத்தில் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருக்கிறார் இந்திய அதிகாரி சினேகா தூபே.
யார் இந்த சினேகா தூபே?
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரை பூர்விகமாகக் கொண்டவர் சினேகா தூபே. இவரது தந்தை ஒரு பொறியியலாளர். தாயார் ஆசிரியர். கோவாவில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா, புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பும் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதே விவகாரங்கள் துறையில் ஆய்வுப்பட்டமும் பெற்றார். மத்திய பொதுப்பணித்துறை தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இவர் 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார்.
2012இல் இவருக்கு இந்திய வெளியுறவுப் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர் இளநிலைச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஸ்பெயினின் மேட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாவது செயலாளர் ஆக பணியாற்றினார். பிறகு இரண்டாம் நிலை செயலாளராக இருந்து முதலாம் நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்று ஐ.நாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
வழக்கமாக சர்வதேச மன்றங்களில் தாயக நாடுகள் மீது பிற நாடுகள் குற்றம்சாட்டும்போது, அதற்கு பதில் தரும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ஐ.நா. அரங்கில் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் தங்களுடைய பதிலை பதிவு செய்வர். அந்த வகையில், சினேகா தூபேவை போலவே கடந்த காலங்களிலும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் பலர் பாகிஸ்கான் சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்வினையாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது உடனுக்குடன் பதில் கொடுத்துள்ளனர்.
ஊடக நேர்காணலை தவிர்த்த சினேகா
இதற்கிடையே, கடந்த 25ஆம் தேதி சினேகா ஐ.நா அரங்கில் சினேகா ஆற்றிய எதிர்வினை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து ஐ.நா நிகழ்வுகள் தொடர்பான செய்தியை சேகரிக்க இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்றிருந்த இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர், கூட்டத்தின் முடிவில் சினேகா ஓய்வெடுத்திருந்த அரங்கின் பகுதிக்கு தமது ஒளிப்பதிவாளர் உதவியுடன் கேமிராவை நேரலையாக ஆன் செய்து கொண்டு, அவரை பேட்டி எடுக்க முற்பட்டார்.
ஆனால், அவருக்கு தமது நேர்காணலை தர முடியாது என்பதை, எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து, தயவு செய்து வெளியே செல்லுங்கள் என்பது போல செய்கையிலேயே காண்பித்து நேர்காணலை தவிர்த்தார் சினேகா. இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
பாகிஸ்தான் பெண் அதிகாரி யார்?
ஐ.நா பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் கவுன்சிலர் ஆக இருப்பவர் சைமா சலீம். ஐ.நா. மன்றத்தில் கண் பார்வை குறைபாடு மிக்க ராஜீய அதிகாரி முதல் முறையாக ப்ரெய்லி முறையில் தமது பதிலை ஆற்றியிருப்பது இதுவே முதல் முறை என அறியப்படுகிறது.
ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, மேல்படிப்பு முடித்த சைமா, அதே துறையில் ஆய்வுப்பட்டமும் முடித்திருக்கிறார். 2007இல் பாகிஸ்தான் மத்திய உயர்நிலை சேவையில் தேர்வெழுத்திய நாட்டிலேயே ஆறாம் இடத்தில் வந்தார் சைமா. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முழு ஊக்கத்தொகையும் பெற்று அயலுறவுப் பணிக்கான மேல் படிப்பையும் இவர் முடித்தார்.
ரெட்டினிட்டிஸ் பிக்மென்டோசா என்ற கண் பார்வை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தமது பதிமூன்றாம் வயதில் கண் பார்வையை இழந்தார். இவருடன் பிறந்த நான்கு சகோதர்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. அதில் ஒருவரான யூசஃப் சலீம், நாட்டிலேயே முதலாவது கண் பார்வை குறைபாடுடைய நீதிபதியாக இருக்கிறார். சைமாவின் சகோதரியும் கண் பார்வை குறைபாடு மிக்கவர். அவர் லாகூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
ஐ.நா அவையில் என்ன பேசினார் இம்ரான் கான்?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை உரையாற்றியபோது, இந்தியாவை கடுமையாக தாக்கி பேசினார்.
"பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளைப் போலவே இந்தியாவுடனும் சமாதானத்தை விரும்புகிறது, ஆனால் ஜம்மு -காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதிலேயே நிலையான அமைதி உள்ளது" என்று இம்ரான் கான் கூறினார்.இந்திய பாதுகாப்புப் படையின் மொத்தமான மற்றும் முறையான மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான ஆவணங்களை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்."பாகிஸ்தானுடனான அர்த்தமுள்ள மற்றும் முடிவு சார்ந்த ஈடுபாட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது" என்றும் அவர் கூறினார், 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் காஷ்மீரில் இந்தியா நிறுவிய ஒருதலைபட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அந்நாடு திரும்பப் பெற வேண்டும்; காஷ்மீர் மக்களுக்கு எதிரான அதன் ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் அதன் வரையமைப்பையே இந்தியா மாற்றி வருகிறது," என்று இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.
இம்ரான் கானின்உரைக்கு பதிலளிக்கும் உரிமையின் கீழ் இந்தியாவின் சார்பாக பேசிய சினேகா தூபே, தீயை மூட்டிவிட்டு, அதே நேரம் தன்னை தீயணைப்பு வீரராக காட்டிக்கொள்ளும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
"பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது என்பதை சர்வதேச நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அமெரிக்காவின் இரட்டைகோபுர தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தார் என்பதை உலகம் இன்னும் மறக்கவில்லை."
"பாகிஸ்தானின் தலைமை, ஒசாமா பின்லேடனை இன்றும் ஒரு தியாகியாக கொண்டாடி வருகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் இந்துக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்கின்றனர்," என்று சினேகா பேசினார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவின் முடிவு, 2
பாகிஸ்தானுக்கு சினேகா தூபேயின் எதிர்வினையை சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலரும் கொண்டாடி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமது பேச்சின்போது இந்தியாவில் ஊடகமும், நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுவதாகக் கூறிய சினேகா, அவை அரசியலமைப்பை காப்பதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்தன, இருக்கின்றன மற்றும் என்றும் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதில் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியும் அடங்கும் என்றும் சினேகா குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் சைமா சலீம் இந்தியாவுக்கு பதிலளித்தார். அப்போது அவர் காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அல்ல என்று கூறினார்.
பாகிஸ்தான் மீண்டும் எதிர்வினை
"சர்வதேச மன்றத்தில் சர்ச்சைக்குரிய பிரதேசமாக உள்ள காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. அந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பின் மூலம் ஜனநாயகக் கொள்கைக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்" என்று சைமா சலீம் தெரிவித்தார்.
கண் பார்வை திறன் குறைபாடுடைய சைமா சலீம், ப்ரெய்லி முறையில் தமது பதிலை இந்தியாவுக்கு தெரிவித்தார். இந்த காணொளியும் அந்நாட்டில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களிலிருந்து கவனத்தை திசை திருப்ப பொய்களை கூறிவருவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை, புதியதாகவோ ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகவோ இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் இந்துத்துவா கொள்கையால் ஈர்க்கப்பட்ட அரசுக்கு, இது தேர்தல் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றியது என்று சைமா கூறினார்..
காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை, ஐ.நா மனித உரிமை ஆணையர் தனது இரண்டு அறிக்கைகளில் பதிவு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்
"மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட முக்கிய மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன" என்றும் சைமா தெரிவித்தார்.
இந்த விவகாரங்களில் இந்தியா பதிலளிக்கத் தவறி விட்டது என்றும் சைமா சலீம் குற்றம்சாட்டினார்.
"இந்தியாவிடம் மறைக்க எதுவும் இல்லை என்றால், அது ஐநா விசாரணையை ஏற்க வேண்டும். கூடவே ஜம்மு -காஷ்மீர் மக்கள் தங்கள் முடிவை எடுக்கும்விதமாக, பாதுகாப்பு சபை நிர்ணயிக்கும் கருத்துவாக்கெடுப்பு யோசனையை ஏற்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் சமூக ஊடகங்களில் பலர் சினேகா தூபேயை பாராட்டி வருவதை போலவே, பாகிஸ்தான் ஊடகங்களும், அந்நாட்டைச் சேர்ந்த சமக ஊடக பயனர்களும் தங்கள் நாட்டின் வெளியுறவு அதிகாரி சைமா சலீமை பாராட்டி வருகின்றனர்.