சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்: விமர்சனம்!!

வியாழன், 10 மார்ச் 2022 (14:38 IST)
'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகிவிட்டவிட்ட நிலையில், 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து திரையரங்கில் வெளியாகும் படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதற்கும் துணிந்தவன்'.
 
படத்தின் துவக்கத்தில் பல கொலைகளைச் செய்கிறார் கதாநாயகன் கண்ணபிரான் (சூர்யா). பிறகு கதை பின்நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்று. அங்கே தமிழ் சினிமாவுக்கே உரிய ஊர். அந்த ஊரின் பெரிய மனிதரின் (சத்யராஜ்) மகன் கண்ணபிரான். வழக்கறிஞர். அவர் ஆதினியைக்(பிரியங்கா மோகன்) காதலிக்கிறார். இதற்கு நடுவில் கண்ணபிரானின் சித்தப்பா (வேல ராமமூர்த்தி) குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறார்.
 
வேறொரு பெண் கண்ணபிரானை தொலைபேசியில் அழைத்த சிறிது நேரத்திலேயே விபத்தில் இறந்துவிடுகிறார். இதன் பின்னணியை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். பொள்ளாச்சி சம்பவம் போன்ற ஒரு பயங்கரத்தை சிலர் அங்கே நடத்திக்கொண்டிருப்பது தெரிகிறது. என்ன செய்கிறார் கண்ணபிரான் என்பது மீதிக் கதை.
 
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமான பாண்டிராஜ், வெவ்வேறு பாணி படங்களை இயக்கிவிட்டதால் அவர் இந்தப் படம் தொடர்பாக ஏற்படுத்திய எதிர்பார்ப்பு குறைவு. ஆனால், 'சூரரைப் போற்று', 'ஜெய்பீம்' படங்களுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால், அவரை மையமாக வைத்து ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், படம் துவங்கி சிறிது நேரத்திலேயே அந்த எதிர்பார்ப்பு பொய்யாகத் துவங்கிவிடுகிறது.
 
முதல் எட்டு நிமிடங்களுக்குள் ஒரு சண்டை, ஒரு பாட்டு முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, இந்தக் கதை நடக்கும் ஊர்களைப் பற்றியும் அந்த ஊர்களுக்கு இடையிலான பகை பற்றியும் சொல்ல நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறார் இயக்குனர்.
 
பிறகு, கதாநாயகன் - நாயகி இடையிலான காதல் காட்சிகள் எந்தப் புதுமையும் இல்லாமல் திரையில் விரிகின்றன. இதுவே பெரும்பகுதி படத்தை எடுத்துக்கொள்ள, இதற்கு நடுவில் வில்லன் அறிமுகமாகிறார். வில்லன் இருக்கும் பகுதி பக்கத்து ஊரைப்போலக் காட்டப்பட்டாலும், சுத்தமாகப் பொருந்தாத ஒரு பெரிய அதிநவீன பங்களாவில் வசிக்கிறார் வில்லன்.
 
படத்தின் பெரும்பகுதி கதை காரைக்குடி, திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் நடந்துகொண்டிருக்க, வில்லன் ஏதோ மும்பையிலிருந்து செயல்படுவதைப்போல காட்சியமைப்பு இருக்கிறது.
 
படத்தில் ஒரு தீவிரமான காட்சி நடந்துகொண்டிருக்கும்போது, சட்டென அந்தக் காட்சியை முடித்துக்கொண்டு, நாயகன் - நாயகி இடையிலான ரொமான்சிற்குத் தாவிவிடுகிறார் இயக்குனர். ஒரு காட்சியில் இளம்பெண் ஒருவரை வில்லன்களிடமிருந்து மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். நீதிபதி இன்னும் வரவில்லை.

பதற்றத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் 'இதோ வந்துவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியேறும் நாயகன், அந்த சீரியஸான சூழலுக்கே பொருந்தாத வேறொரு காட்சிக்குப் போய்விடுகிறார். அதேபோல, படத்தின் பிற்பகுதியில் வரும் "சும்மா சுர்ருன்னு" பாடல், நன்றாக படமாக்கப்பட்டிருந்தாலும், தேவையே இல்லாத இடத்தில் நுழைக்கப்பட்டிருக்கிறது.
 
முதல் சில காட்சிகளிலேயே வில்லன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறார். மாமனார் கேட்டால், டிரைவரோடு ஓடிப்போய்விட்டதாகச் சொல்லிவிடுகிறார். 'சே.. பெண்ணை இப்படி வளர்த்துவிட்டோமே' என்று மாமனாரும் படத்தின் கிளைமாக்ஸ்வரை பேசாமல் இருந்துவிடுகிறார்.
 
தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு முக்கியமான சம்பவம் குறித்த விவகாரத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்க நினைத்த இயக்குனர், திரைக்கதையில் அந்த விஷயத்தை அழுத்தமாகச் சொல்லப் பெரிதாக மெனக்கெடவில்லை. பல காட்சிகள் துண்டுதுண்டாக வந்துபோகின்றன. பல இடங்களில் நாயகன் - நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு படமாகவும் வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறொரு படத்தைப் போலவும் தோன்றுகின்றன.
 
கண்ணபிரானாக வரும் சூர்யாவும் ஆதினியாக வரும் பிரியங்கா மோகனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் சத்யராஜ், சரண்யா, இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர் போன்றவர்களுக்கும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சூரி, புகழ் ஆகியோர் நடித்திருக்கும் பாத்திரங்கள் கதையில் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு காட்சியில்கூட சிரிக்கவைக்கவில்லை.
 
இந்தப் படத்தில் வில்லனாக வினய். எல்லாக் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவம். அதிகபட்சமாக, சில இடங்களில் வில்லத்தனமாக சிரிக்கிறார். அவ்வளவுதான். படத்தில் வரும் இரண்டு பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றின் ஒளிப்பதிவு, நடன அமைப்பு, இசை எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றன.
 
ராம் - லட்சுமணன், அன்பறிவ் ஆகியோரின் உழைப்பு சண்டைக் காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. முக்கியமான விவகாரத்தை எடுத்துக்கொண்டு, கதாநாயகனை மையப்படுத்தி ஒரு மாஸ் படத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் முழுமையாக வெற்றி கிடைக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்