எடப்பாடி Vs ஸ்டாலின்: சென்னை கோட்டையை பிடிப்பது யார்?

புதன், 7 ஏப்ரல் 2021 (12:02 IST)
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதில் சுமார் 71.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
 
முழு தரவுகளும் வந்தபிறகு இந்த சதவீதக் கணக்கு உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே. பழனிசாமி, திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை அழைத்துக் கொண்டு தேர்தல் களம் கண்டனர்.
 
ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில், பரவலாக மாநிலத்தின் எல்லா தொகுதிகளிலும் அதிக வன்முறையின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கினாலும், அவை காவல்துறை உதவியுடன் தடுக்கப்பட்டன.
 
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹு கூறுகையில், "தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும். தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது," என்று தெரிவித்தார்.
 
ஜெயலலிதா மறைவுக்கு பிந்தைய மாற்றம்
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தனது பதவிக்காலத்திலேயே உயிரிழந்தார். இதனால், அவர் விட்டுச் சென்ற பதவிக்காலத்தின் மீதமுள்ள நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்ய தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்களும் அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தனர்.
 
ஜெயலலிதா 2016 டிசம்பரில் மறைந்த பிறகு தொடக்கத்தில் சில மாதங்கள் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில், அடுத்த முதல்வராக சசிகலா நடராஜன் பதவியேற்க ஆயத்தமான வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
இதனால், அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சசிகலா கைகாட்டிய வேளையில், அதிருப்தியில் தனித்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். அப்போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
 
இந்த இருவர் கூட்டணி, 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி சேர காரணமாகியது. அதே கூட்டணி தற்போதைய சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்கிறது. ஆனால், 2019 மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அதிமுக அணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார்.
 
2011ஆம் ஆண்டிலும் 2016ஆம் ஆண்டிலும் தொடர் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியில் நீடித்தார். அதுவரை மாநிலத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் திமுக அல்லது அதிமுக மட்டுமே மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன.
 
ஐந்து முனை போட்டி
இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, இடைவிடாது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது. இந்த தேர்தலில் ஸ்டாலின் தன்னை இரு முறை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்த கொளத்தூர் தொகுதியில் களம் கண்டார். வாரிசு அரசியல் திமுகவில் ஊக்குவிக்கப்படாது என்று கூறி வந்த ஸ்டாலின், இந்த தேர்தலில் திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதியை திருவல்லிக்கேணி-சேப்பாகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் தரப்பட்டன.
 
மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றொரு கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
 
இதேவேளை மக்கள் நீதி மய்யம் கட்சி 234 தொகுதிகளில் தனது கட்சியினரையும் கூட்டணி கட்சியினரையும் களமிறக்கியது. ஏற்கெனவே மக்களவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் புதிதல்ல என்றாலும், மக்களவையை விட மாநில சட்டப்பேரவையில் போட்டியிடுவது இடங்கள் மற்றும் பரப்புரை அடிப்படையில் மிகவும் பெரியது என்ற அனுபவத்தை அக்கட்சிக்கு கொடுத்திருக்கும் என்றே தோன்றுகிறது.
 
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் களம் கண்டார். தொடக்கத்தில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக களம் காண்பதாகக் கூறிய அவர், பிறகு திருவொற்றியூர் தொகுதியில் நின்று தேர்தலை சந்தித்தார்.
 
ஆதரவை தவிர்த்த சசிகலா
அமமுக கட்சி, சசிகலா ஆதரவுடன் தேர்தல் களம் கண்டாலும், இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்த சசிகலா, அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்று கூறினார். ஆனால், கடைசிவரை அவர் நேரடியாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் வழிநடத்தும் அதிமுகவையோ, டி.டி.வி. தினகரன் வழிநடத்தும் அமமுகவையோ ஆதரிக்கவில்லை.
 
இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களை கவர பல்வேறு செயல் திட்டங்களையும் தொகுதிவாரியாக தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தாலும், பரப்புரைகளின்போது ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளை பட்டியலிடுவதை விட, பரஸ்பரம் தனி நபர் குற்றச்சாட்டுகளை மையப்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டின.
 
செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலின்போது, தேர்தல் விதிகளை மீறிச் செயல்பட்டதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுக்களை அளித்தன. தேர்தல் நடத்தை விதிகளை திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீறி விட்டதாதக் கூறி அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவர் வாக்குரிமை செலுத்திய பிறகு தமது கட்சியின் தேர்தல் சின்னத்தை காண்பித்ததாக அதிமுக கூட்டணி குற்றம்சாட்டியது.
 
மறுபுறம் தமது சொந்த தொகுதியான தேனியில் தான் சென்ற வாகனத்தை சில திமுகவினர் தாக்கியதாக ரவீந்திரநாத் குற்றம்சாட்டினார். மேலும், நடந்த தாக்குதலில் அவரது காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளில், கற்கள் வீசப்பட்டதில் ஓட்டை விழுந்திருந்தது.
 
இதேபோல, திமுக வேட்பாளரான கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தன்னை அதிமுகவினரும், பாஜகவினரும் தாக்க முற்பட்டதாக குற்றம்சாட்டினார்.
 
சேலத்தில் பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்த நபருக்கு அங்கிருந்த வாக்குச்சாவடியில் இருந்தவர் ஆட்சேபம் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
பிரபலமான 49பி விதி
சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இரண்டு வாக்காளர்கள், தங்களுடைய வாக்கை வேறு யாரோ பதிவிட்டதாக புகார் கூறினர். தேர்தல் விதி 49பி-இன்படி வாக்குச்சீட்டு முறையில் தங்களுடைய வாக்குரிமையை செலுத்த அவர்கள் உரிமை கோரினர்.
 
இத்தகைய விதியின் சிறப்பம்சத்தை மையமாக வைத்து நடிகர் விஜய் 2018ஆம் ஆண்டில் சர்கார் என்ற படத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு இந்த தேர்தல் விதி தொடர்பான விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
 
அசாதாரணமான முறையில் ராமநாதபுரத்தின் கோடங்கிப்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யாமல் புறக்கணித்தனர்.
 
விருதுநகர் தொகுதியில் எந்த சின்னத்தில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அது தவறான முடிவை காட்டுவதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், எங்கெல்லாம் அத்தகைய குறைபாடு இருந்ததா, அங்கெல்லாம் சரியான வாக்கை பதிவு செய்ய வசதியாக, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சர்ச்சை ஏற்படுத்திய நட்சத்திரங்களின் செயல்பாடு
திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் வாக்குரிமையை செலுத்தினார்கள். நடிகர் விஜய் தனது வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் கார் செல்ல முடியாது என்பதால் மிதிவண்டியில் வந்து வாக்குரிமை செலுத்திச் சென்றது, நடிகர் அஜித் தனது முக கவசத்தில் சிவப்பு மற்றும் கறுப்பு நிற பட்டை அணிந்திருந்த காட்சி போன்றவை அரசியல் ரீதியாக சர்ச்சைக்கு வழிவகுத்தன.
 
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தேர்தலில் வாக்குரிமை செலுத்த வந்த அனைவருக்கும் அவர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் கை சுத்திகரிப்பான்கள் தெளிக்கப்பட்டன. முக கவசம் அணிவதும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டன.
 
கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான திமுக எம்.பி கனிமொழி பாதுகாப்பு கவச ஆடையுடன் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்குரிமையை செலுத்தி விட்டுச் சென்றார்.
 
மொத்தம் உள்ள 88,937 வாக்குச்சாவடிகளில் இந்த வாக்குப்பதிவு நடந்தது. இதில் 10,813 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பிரச்னைக்குரியவை என்றும் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் சிக்கலானவை என்றும் வகைப்படுத்தப்பட்டதால் பல இடங்களில் மாநில காவல்துறையினருடன் சேர்ந்து மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புகாக நின்றிருந்தனர்.
 
இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்