அது டிரோன் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.37 முதல் 1.43 மணியளவில் நடந்துள்ளது. ஒரு வெடிப்பு சம்பவத்தில் விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பிரிவின் மேற்கூரை லேசாக சேதம் அடைந்ததாகவும் மற்றொரு வெடிப்பு சம்பவம் திறந்தவெளி பகுதியில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தீவிரவாத நடவடிக்கை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ தனது வசம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த ஏஜென்சிதான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பாகும். இதே வேளை, ஜம்முவில் மேலும் ஒரு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஐஜி தில்பாக் கூறியுள்ளார்.
மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் டிரோனில் வெடிகுண்டு நிரப்பி அதை வெடிக்க வைக்கும் நோக்குடன் இருந்த நபர் பிடிபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நபருக்கும் ஜம்மு எல்லை விமானப்படை தளத்தில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இன்னும் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.