நரேந்திர மோதியை புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்: மோதி இந்தியாவை சகிப்புத்தன்மை மிக்க நாடாக மாற்றியுள்ளார்

திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:39 IST)
நரேந்திர மோதியை புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்: மோதி இந்தியாவை சகிப்புத்தன்மை மிக்க நாடாக மாற்றியுள்ளார்
பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் கைத்தேர்ந்த பேச்சுவார்த்தை திறன், பாலிவுட் மீதான இந்தியர்களின் ஈர்ப்பு, விவேகானந்தரின் பெருமை, இந்தியாவுடனான 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் என 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வில் பல விஷயங்களை தனது பேச்சில் விரிவாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சி இன்று (திங்கள்கிழமை) மதியம் 1 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் திறக்கப்படவுள்ள உலகிலேயே மிகப்பெரிய மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
 
கடந்தாண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்காக 'ஹவுடி மோடி' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுமார் 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டு நரேந்திர மோதிக்கும், டொனால்ட் டிரம்புக்கும் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர்.
 
ஆனால், இம்முறை ஆமதாபாத்தில் இருநாட்டு தலைவர்களையும் வரவேற்க மொடெரா மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.
 
முதலில் பேசிய நரேந்திர மோதி, நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்புக்கான விளக்கத்தையும் அளித்தார். நமஸ்தே என்று கூறுவதன் அர்த்தம் அந்த மனிதருக்கு மட்டும் மரியாதை வழங்கவில்லை என்றும், அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையையும் மதிக்கும் என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூட்டத்தினருக்கு இந்தியில் நமஸ்தே என்று கூறி உரையைத் தொடங்கினார்.
 
"என்னுடைய உண்மையான நண்பன் மோதி"
 
இப்படிபட்ட ஒரு நிகழ்வுக்காக தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறிய டிரம்ப், நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் ஒருவரை தன்னுடைய உண்மையான நண்பன் என்று கூறிக் கொள்வதில் தான் பெருமை கொள்வதாகவும், அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, மதிக்கிறது என்பதை கூறுவதற்காக தானும் தனது மனைவியும் உலகைச் சுற்றி 8,000 மைல்கள் பயணித்து இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்தியர்களுக்காக அமெரிக்கா என்றும் விசுவாசமாக இருக்கும் என்று தெரிவித்த டிரம்ப், இந்த புதிய மைதானத்தில் தான் உரையாற்றுவது மகிழ்ச்சியை தருவதாகவும், மொடெரா அரங்கம் மிக அழகாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மெலானியா மற்றும் தனது குடும்பத்தினர் இந்த மகத்தான வரவேற்பை என்றும் மறக்கமாட்டோம் என்றும், இந்த நாளில் இருந்து இந்தியா எங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமான நாடாக மாறிவிட்டது என்று அதிபர் டிரம்ப் சிலாகித்தார்.
 
"டீ வாலாவாக வேலை பார்த்தவர் மோதி"
 
தேனீர் கடையில் ஒரு ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் நரேந்திர மோதி என்று குறிப்பிட்டு பேசிய டிரம்ப், அனைவரும் அவரை நேசிக்கிறார்கள் என்றும், ஆனால் அவர் பேச்சுவார்த்தைகளில் மிகவும் கடினமானவர் என்றும் டிரம்ப் பேசினார்.
 
இந்த பரந்து விரிந்திருக்கக்கூடிய ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோதிதான் என்று புகழ்ந்த டிரம்ப், கடந்த தேர்தலில் மோதிக்கு வாக்காளர்கள் மகத்தான வெற்றியை கொடுத்தார்கள் என்றும், மோதி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு அவர் என்றும் அவர் கூறினார்.
 
நரேந்திர மோதி தலைமையில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் 270 மில்லியன் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்றும், உலகளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவு வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், 320 மில்லியன் மக்களுக்கு இணைய வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
 
மேலும், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் 12 பேர் கடும் வறுமையிலிருந்து மீட்கப்படுவதாக டிரம்ப் பேசினார்.
 
இந்தியா சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை முதலாக கொண்டு செயல்படுகிறது என்றும், பல்வேறு சமூகங்களும் மொழிகளும் இருந்தாலும், மக்கள் அனைவரும் ஒரு சிறந்த தேசமாக ஒன்றுபடுகிறீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
"சகிப்புத்தன்மை மிக்க நாடாக மாற்றியுள்ளார்"
 
உலகிலேயே நடுத்தர மக்களின் இல்லமாக இந்தியா விளங்கும் என்று பேசிய டொனால்ட் டிரம்ப், இன்னும் 10 ஆண்டுகளில் கடும் வறுமை சூழல் என்ற நிலை இந்தியாவில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், "மோதி இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாகவும், அமைதியான நாடாகவும், சகிப்புத்தன்மை மிக்க நாடாகவும் மாற்றியுள்ளார்."
 
ஒவ்வொரு மனிதனுக்கும் முன்பாக நான் பயபக்தியுடன் நின்று கடவுளை அவனில் காணும் தருணம், அந்த தருணம் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்ற விவேகானந்தரின் வரிகளை நினைவுக்கூர்ந்த டிரம்ப், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மிக உயரிய நோக்கத்துக்காக மக்கள் பிறக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
 
"கடவுளாக போற்றப்படும் கிரிக்கெட் வீரர்கள்"
 
ஆண்டுக்கு 2000 படங்களை பாலிவுட் உருவாக்குகிறது என்றும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்கள், பாங்க்ரா நடனம் மற்றும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே மற்றும் ஷோலே போன்ற மகத்தான படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர் என்றும் டொனால்ட் டிரம்ப் பேசினார்.
 
மேலும், தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி போன்றவர்களின் சாதனைகளை கொண்டாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
 
மகத்தான இந்தியர் சர்தார் படேலின் பெருமையை போற்றும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை அவருக்காக இந்தியா வைத்துள்ளதாகவும், 100 கோடிக்கும் அதிகமான மெழுகுவர்த்திகள் தீபாவளி பண்டிகைக்காக ஏற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
"ஐஎஸ் தீவிரவாதத்தை அழித்தேன்"
 
அமெரிக்காவின் ராணுவம் பெரியளவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே இஸ்லாமியவாத பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா மற்றும் அமெரிக்க இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும், தன்னுடைய நிர்வாகத்தின்கீழ்  ஐஎஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறிய டிரம்ப், உலகின் மிகச்சிறந்த மற்றும் அச்சம் தரக்கூடிய ராணுவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்றும், மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்திய ஆயுதப் படைக்கு விற்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 
 
இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட கடமைப்பட்டுள்ளது என்று தெரிவித்த டிரம்ப், தான் பதவியேற்றதிலிருந்து பாகிஸ்தானுடன் நேர்மறையான வழியில் செயல்பட்டு, பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிரமாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்