சீறும் டெல்டா திரிபு: இந்தியாவில் கண்ட காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:49 IST)
இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார்.

கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
டாக்டர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
 
குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
 
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.
 
இதுவரை இல்லாத அளவில் 94 கொரோனா மரணங்கள் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் பதிவானதாக, சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.
 
நாட்டில் இதுவரை 321,429 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.
 
மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை
 
இலங்கையிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவமனைகளில் படுக்கைகள் கோவிட் தொற்றியோரால் நிரம்பியுள்ளதுடன், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனைகளின் அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளனர்.
 
இரத்தினபுரி, கராபிட்டிய, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட இடங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
 
மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை வரும் திங்கட்கிழமை முதல் நோய் அறிகுறிகள் தென்படாத கோவிட் தொற்றாளர்களை, அவர்களது வீடுகளிலேயே வைத்து சிகிச்சைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்;மானித்துள்ளது.
 
இந்நிலையில், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுக்கிறது.
 
நாட்டில் தற்போது பரவிவரும் வைரசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கோவிட் தடுப்பு செயலணி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தியின் பதிவு
 
இலங்கையின் பிரபல சிங்கள ஊடகவியலாளரான திலக்ஷனி மதுவந்தியின் பேஸ்புக் பதிவு, நாட்டின் பேசுப்பொருளாக தற்போது மாறியுள்ளது.
 
''இந்தியா தொடர்பில் நான் வாசித்த செய்தியை, தற்போது எனது இரு கண்களினால் காண்கின்றேன்" என அவர் மருத்துவமனையிலிருந்து பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
 
அதிகாலை 1:20 மணியளவில் களுபோவில மருத்துவமனையின் கொரோனா வார்டின் நிலைதான் இது. வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள். அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள்.
 
வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஆக்சிஜன் வாயு விநியோகிக்கப்பெறுகிறார்கள்".
 
நோயாளிகள் தரையில் நடக்க பயப்படுகிறார்கள்
 
"மீதமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் நீண்ட இருக்கைகளிலும், நாற்காலிகள், மரங்களின் கீழும் படுத்திருக்கிறார்கள்.
 
மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் நோயாளிகள் படுத்திருப்பதை காணமுடிகின்றது. குளிரிலும் நுளம்பு (கொசுக்) கடியிலும், இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
 
இன்று காலை கூட, அனுமதிக்கான வரிசை மிக நீண்டதாகவே காணப்படுகிறது. நான் என் தாயை நாற்காலியில் அமர்த்தினேன். என் கண்முன்னே சில மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
 
மருத்துவமனையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் சோர்வடையாமல் தெய்வத்தைப் போலவே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
 
என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடும்போது, என் தந்தை பல நாட்களாக ஆக்சிஜன் வாயு இயந்திரத்திற்கு காத்திருக்கிறார்.
 
இந்த வாழ்க்கையில் அனுபவிக்க இனி இதனைவிட எந்த வலியும் இல்லை. இதை விட உதவியற்ற நிலை எதுவுமில்லை.
 
நாளை எனக்கும் தொற்று ஏற்படும். நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள். அனைத்து குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று அந்தப் பதிவு நீள்கிறது.
 
ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தியின் இந்த பதிவு நேற்றும், இன்றும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்