அன்பே இவான்கா....” இணையத்தில் வைரலாகும் இவான்கா டிரம்பின் புகைப்படங்கள்
திங்கள், 2 மார்ச் 2020 (22:07 IST)
அன்பே இவான்கா....” இணையத்தில் வைரலாகும் இவான்கா டிரம்பின் புகைப்படங்கள்
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருடன் மெலானியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் வருகைத் தந்திருந்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துவிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை டிரம்ப் குடும்பம் சுற்றிப் பார்த்தது.
டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கணவர் ஜேரட் குஷ்னர் உடன் தாஜ் மஹால் முன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும், இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டார்.
இந்த சூழலில், பிரபல இந்திய நடிகரும், பாடகருமான டில்ஜித் தோசஞ் இவான்காவின் புகைப்படத்தை திருத்தி தன்னையும் அதில் இணைத்திருந்தார். பார்ப்பதற்கு இவான்கா அருகில் டில்ஜித் தோசஞ் அமர்ந்திருப்பது போன்று அது இருந்தது.
இவான்கா தன்னை தாஜ் மஹாலுக்கு அழைத்து செல்ல கேட்டதாகவும், அதனால்தான் கூட்டிக்கொண்டு சென்றதாகவும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் அவர் வேடிக்கையாகத் தெரிவித்திருந்தார்.
அதற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்த இவான்கா, டில்ஜித்தின் ட்வீட்டை மறுபகிர்வு செய்து, பிரமிக்கத்தக்க தாஜ் மஹாலுக்கு என்னை அழைத்து சென்றதற்காக நன்றி என்று கேலியாகத் தெரிவித்துள்ளார்.
டில்ஜித் எடிட் செய்து வெளியிட்ட புகைப்படத்தை தவிர்த்து மேலும் சில இவான்காவின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன.
தாம் அமெரிக்க அதிபரின் மகள் என்றெல்லாம் பார்க்காமல், இவான்கா இந்த புகைப்படங்களை ரசித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், தாஜ் மஹால் முன் அமர்ந்து எடுத்த புகைப்படங்களின் திருத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.