கொரோனா வைரஸ் பரவும் அச்சம், தயார் நிலையில் இலங்கை அரசு - விரிவான தகவல்கள்

புதன், 4 மார்ச் 2020 (14:16 IST)
உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கொவிட் - 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கை பிரஜை, இத்தாலியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பிரஜையொருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளான சீன பிரஜை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த சீன பெண் பிரஜை முழுமையாக குணமடைந்து, கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சீனா நோக்கி பயணித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தயார் நிலையில் இலங்கை உள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.


இலங்கையின் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலை அனைத்து சந்தர்ப்பங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதான நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சர்வதேச விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்குள் வருகைத் தரும் அனைத்து பயணிகளும் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே, நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தென் கொரியா, இத்தாலி மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தொற்றுநோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை பிரஜைகள் மாத்திரமன்றி, வெளிநாட்டு பிரஜைகளையும் இந்த தொற்று நோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெருந்திரளான வெளிநாட்டு பிரஜைகள் ஒரே சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு வருகைத் தருவார்களாயின், அந்த அனைத்து பிரஜைகளும் அசௌகரித்திற்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவை என கூறிய அவர், தொற்று நோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கான இடத்தை அடையாளம் கண்டுக்கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த நாடுகளின் தூதுவராலயங்களுக்கு அறிவித்து, நாடுகளை தெளிவுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் குறித்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையான காலத்திற்குள் மாத்திரம் தென்கொரியாவிலிருந்து 419 பேரும், இத்தாலியிலிருந்து 726 பேரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகவும், தொற்று நோய் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளமையினால் நாட்டிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவடைய கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தொற்று நோய் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறும் பட்சத்தில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அது தேசிய அனர்த்த நிலைமை வரை செல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார்.

அதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பயணிகள் கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்க தடை
வெளிநாட்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்காதிருக்க செவ்வாய்க்கிழமை முதல் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

தொற்று நோய் மற்றும் நோய் தடுப்பு பணிப்பாளருக்கு காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் தொடர்பில் சுகாதார அமைச்சு, துறைமுக அதிகார சபைக்கும், குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பல்களை வர வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

கப்பல்களுக்கு தேவையான எரிப்பொருள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கப்பல்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

குறிப்பாக சொகுசு பயணிகள் கப்பல்களில் வருகைத் தருவோர் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், அவ்வாறானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதற்கான சந்தர்ப்பம் அதிகம் எனவும் டாக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

தென்கொரியா, இத்தாலி, இரான், ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாரிய அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தென்கொரியா, இத்தாலி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

குறித்த நாடுகளில் தொழில் நிமித்தம் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சென்றுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்