கொரோனா வைரஸ்: கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்று சேருவோம் - ஏ.ஆர். ரஹ்மான் .

வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (21:23 IST)
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவர்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பலரது கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமன்றி, சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட சில பகிர்வுகளை இங்கே பார்க்கலாம்.

.ஆர்ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தற்போதைய சமூக சூழ்நிலையை பிரதிபலிக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
''இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களுடைய துணிச்சலுக்கும், அவர்களுடைய தன்னலமற்ற சேவைக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த செய்தியை பதிவிடுகிறேன்.''

''இந்த மோசமான தொற்று நோயிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக அவர்கள் அவர்களுடைய உயிரை பணையம் வைத்திருக்கிறார்கள்.

"நம்முடைய வேறுபாடுகளையெல்லாம் மறந்து இந்த உலகையே தலைகீழாக மாற்றிய கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிக்கு எதிராக ஒன்று கூடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மிகத்துடைய அழகை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுதான்."

"பக்கத்து வீட்டினருக்கு, மூத்த குடிமக்களுக்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள். கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். மத வழிபாட்டு தளங்களில் ஒன்று கூடுவதற்கான நேரம் இதுவல்ல. அரசாங்கத்துடைய ஆலோசனைகளை கேளுங்கள். சில வாரங்களுக்கு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வைரஸை யாருக்கும் பரப்ப வேண்டாம். சக மனிதருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டாம்."

"பொய்யான வதந்திகளை பரப்புவதற்கும், அதிக கவலை மற்றும் பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. தயவுடனும், சிந்தனையுடனும் இருப்போம். பல மில்லியன்களின் வாழ்க்கை நம் கையில் உள்ளது,'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

பி.சி.ஶ்ரீராம்: "பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `வைரஸ் ஒரு நாத்திகர்!" என்று பதிவிட்டுள்ளார்.

"வைரஸுக்கு எந்த மதமும் இல்லை. வைரஸ் ஒரு நாத்திகர்! அது எந்த கடவுளுக்கும் சொந்தமானது இல்லை.

தனியாக இருப்பதன் மூலம் ஒன்றுபட்டு வைரஸை எதிர்த்துப் போராடுவோம்," எனப் பதிவிட்டிருக்கிறார்.

யோகிபாபு: தமிழில் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு பெண் காவலர்களுக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

"உங்கள் வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவுங்கள்."

"பெண் காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள். அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்," என்று வலியுறுத்தியுள்ளார் யோகிபாபு.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்