தமிழகத்தில் கொரோனா: ஊரடங்கை மீறியதால் 45,000 வழக்குகள், 56,000 கைதுகள்
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:36 IST)
கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்காததால் மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யும் திட்டம் ஏதும் இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.
சென்னையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் முதலமைச்சர் என்று ஆய்வுசெய்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பலரும் ஊரடங்கு உத்தரவைச் சரியாகக் கடைபிடிப்பதில்லை என்றும் இதனால், 144 தடை உத்தரவை மாநில அரசு கடுமையாக செயல்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது தமிழ்நாட்டில் 1,34,569 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவருவதாகவும் இவர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணை ஆகியவை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய முதல்வர், இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 7,198 பேர் வெளி மாநிலங்களில் தொழிலாளர்களாகப் பணிபுரிவதாகத் தெரிவித்தார்.
பல மாநிலங்களில் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அலுவலகங்கள் இயங்கவில்லை. அரசுக்கு வரும் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழ்நாட்டில் அரசு ஊழியர் சம்பளத்தை பிடிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை" என முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கை மீறியதாக 45,046 வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும் 56,393 பேர் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் 37,760 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கொரோனா குறித்து வதந்திகளைப் பரப்பியது தொடர்பாக 92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 95 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஒத்துவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்படுமா என்பது குறித்துக் கேட்டபோது, விரைவில் அதுகுறித்து முடிவுசெய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றும்படி பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மத்திய அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் தொடர் ட்விட்டர் பதிவுகளில், பிரமதர் சொல்வதை மக்கள் கேட்பதைப் போல, தாங்கள் சொல்வதையும் தொற்று நோய் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் சொல்வதையும் பிரதமர் கேட்க வேண்டுமென சிதம்பரம் கூறியிருக்கிறார்.
"நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்குகளை ஏற்றுகிறோம். பதிலுக்கு தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். தொற்றுநோய் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
எளியவர்களுக்கான நிதி உதவி குறித்து நீங்கள் அறிவிப்பீர்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் முழுமையாக கண்டுகொள்ளப்படாமல்போன எளிய பிரிவினருக்கு வாழ்வாதார தொகுப்புதவிகளை அறிவிப்பீர்கள் எனக் கருதினோம்.
பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்தி, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் தூண்டுவதற்கான நடவடிக்கைகளை அறிவிப்பீர்கள் என பணியாற்றும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எதிர்பார்த்தார்கள். தொழில் செய்பவரிலிருந்து தினக்கூலி வரை இதனை எதிர்பார்த்தோம்.
ஆனால், இந்த இரண்டு திசையிலும் ஏதும் செய்யவில்லையென மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். அடையாள ரீதியிலான செயல்கள் முக்கியமானவை. ஆனால், தீவிரமான சிந்தனைகளும் நடவடிக்கைகளும் அதைவிட முக்கியமானவை" என ப. சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று பதிவிட்டிருந்த ப. சிதம்பரம், கடந்த 25-3-2020ஆம் தேதி நிதியமைச்சர் அறிவித்த நிதி உதவித் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு பிரதமர் புதிய திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
மேலும், இந்தத் தொற்று நோயைப் போராடி வெல்லுவதற்கு பல லட்சம் கோடி ரூபாயும் நெஞ்சுறுதியும் வேண்டும். இவை இரண்டும் அரசிடம் குறைவாக இருப்பதைப் போல் தெரிகிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் என்ன நிலை?
இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்திருந்தது. நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தற்போது தமிழ்நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இவர்களில் 264 பேர் டெல்லி மாநாடு தொடர்புடைய நோயாளிகள் என அறியப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று மாலை முதல் இன்று காலைவரை 399 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 118 இரு சக்கர வாகனங்கள், 4 இலகு ரக வாகனங்கள், 4 ஆட்டோக்கள் உள்பட 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 144 தடை உத்தரவைச் செயல்படுத்த நகரம் முழுவதும் 148 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.