கொரோனா வைரஸ்: 'சீனாவில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது'

செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:57 IST)
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் சீன அரசின் அதிகாரிகள் மற்றும் ஹூபேவில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தார்.
 
சீனாவில் கொரோனா வைரஸ் - இதுவரை
 
கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. அந்த நகரத்தில் 11 மில்லியன் (1.1 கோடி) பேர் வசிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்