கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா - புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு
வெள்ளி, 27 மார்ச் 2020 (13:18 IST)
85,000-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3169) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.
உலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா “மிகவும் வேகமாக” மீண்டெழும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு என்னும் நிலையை அமெரிக்கா பெற்றுள்ளது.
இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், “நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும், நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், “சீனாவில் நிலவும் உண்மை நிலை குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரவுள்ள கிறித்துவர்களின் முக்கிய பண்டிகையான உயிர்ப்பு ஞாயிறுக்கு (Eater Sunday) முன்னதாக இந்த முடக்க நிலையை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளது அந்த நாட்டில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதை போன்ற உத்வேகத்தை அளிப்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 3.3 மில்லியன் மக்கள் இந்த நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனதாக அரசிடம் முறையிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், சேவை மற்றும் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியுள்ளது.
இதனால் மக்கள் அதிவேகமாக வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5,52,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பற்றிய மற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:
பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐயும் தாண்டியுள்ள நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக கடுமையாக பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு அந்த நாடு முழுவதும் மக்கள் கரவொலி எழுப்பினர்.
வீடுகளின் பால்கனி, முகப்பு, தோட்டம் உள்ளிட்டவற்றில் நின்றுகொண்டிருந்தவாறு, நாட்டின் சுகாதார பணியாளர்களுக்கு கரவொலியின் மூலம் மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில், பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக, இதே பாணியில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் மக்கள் கரவொலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரஷ்யாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள ரஷ்யர்கள் உடனடியாக தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அளித்தால் அவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர வழிவகை செய்யப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்நாட்டு அளவில் கொரோனா வைரஸின் பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தரவுத்தளங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் வருகையின் மூலம் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு தடை விதிப்பதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக நாளை (சனிக்கிழமை) முதல் சீனாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டும் பணிபுரிந்தால் போதும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகம் (927) ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
“நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக நமது கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் களமிறங்குவதற்காக 21 நாட்களுக்கு முடக்க நிலை அறிவிக்கப்படுகிறது” என்று தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியுள்ள நிலையிலும் அங்கு இதுவரை நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படாதது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காணொளி காட்சி வழியாக நடந்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு தேவையான முக்கிய சுகாதாரத்துறை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆஸ்திரேலியா உதவி செய்யும்” என்று கூறினார். மேலும், பெரு மற்றும் உருகுவே உள்ளிட்ட நாடுகளில் சிக்குண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படாத அமெரிக்கர்கள் மூலம் தங்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுடனான எல்லையை மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் மூடியுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மெக்ஸிகோ உடனான எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. முகக்கவசங்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், “அமெரிக்கர்கள் வீடுகளிலேயே இருங்கள்” என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மனித குரங்குகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியதாக அறியப்படும் கொரோனா வைரஸின் பாதிப்பு இதுவரை விலங்குகளிடையே பரவுவதாக அறியப்படவில்லை. எனினும், மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மனித குரங்குகள், கொரில்லா, சிம்பன்சிகள், ஓராங்குட்டான்கள் ஆகிவை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும் என்று அறியலாளர்கள் நேச்சர் சஞ்சிகையில் கட்டுரை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.