கொரோனா வைரஸ்: போதுமான தடுப்பூசிகளை இந்தியாவால் தயாரிக்க முடியுமா?

புதன், 5 மே 2021 (18:37 IST)
கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தங்களிடம் எஞ்சிய தடுப்பூசிகள் எதுவும் இல்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. வேறு வகையில் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 10 சதிவீதத்துக்கும் குறைவானோருக்கே தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
 
இந்தியாவிடம் என்னென்ன தடுப்பூசிகள் இருக்கின்றன?
 
இந்தியாவின் சீரம் நிறுவனம் உலகத்தின் வேறு எந்த நிறுவனத்தையும் விட அதிக அளவில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது என பிரிட்டனின்  சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் குறிப்பிட்டுள்ளார்.
 
அது உண்மையாகவே இருந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் சீரம் நிறுவனம் திணறி வருகிறது.
 
இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா போட்டிருக்கிறது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
 
ஆனால் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா கூறியுள்ளார்.
 
போதிய தடுப்பூசிகள் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தள்ளி வைப்பதாக அதிக தொற்று பரவலுக்கு உள்ளாகி இருக்கும்  மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துவிட்டது.
 
ஆஸ்ட்ராசெனீகா நிறுவன தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வரும் சீரம் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக்  நிறுவனம் ஆகியவை ஒரு மாதத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 9 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் கொண்டவை. அவற்றுக்கு இந்திய அரசு முறையே ரூ.2800  கோடி மற்றும் ரூ.1470 கோடி நிதி தருவதாக உறுதியளித்துள்ளது.
 
சில குறிப்பிட்ட நன்கொடையாக வழங்கப்படும் தடுப்புசிகளைத் தவிர பிற வெளிநாடுகளுக்கு, கோவிஷீல்டு ஏற்றுமதி செய்வதை கடந்த மார்ச் மாதம் இந்தியா  நிறுத்தி வைத்தது. உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்துக்கு விநியோகிக்க தடைவிதிக்கப்படவில்லை.
 
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா அனுமதி  அளித்துள்ளது.
 
கூடுதலாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதித்துள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் இன்னும்  தொடங்கப்படவில்லை.
 
இந்தியாவுக்கு அமெரிக்கா என்ன உதவி அளிக்கிறது?
 
சுமார் 6 கோடி ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அமெரிக்கா, அது கிடைத்தவுடன் பிற நாடுகளுக்கு பகிர்ந்து வழங்க முடியும் என்று கூறியிருக்கிறது. எனினும் இதில் இந்தியாவுக்கு எந்த அளவுக்குத் தடுப்பூசி கிடைக்கும் என்று இதுவரை தெளிவாகவில்லை.
 
ஆஸ்ட்ராசெனிகாவின் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆயினும் கோவிஷீல்ட் தயாரிக்கப் பயன்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கிறது.
 
முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனம் சில குறிப்பிட்ட மூலப் பொருள்கள் அமெரிக்காவில் இருந்து கிடைக்கவில்லை  என்று புகார் கூறியிருந்தது.
 
ஆனால் தடுப்பூசி வழங்கும் நடைமுறை மிகவும் சிக்கலானது எனக் குறிப்பிடுகிறார் லிவர்பூலின் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் சாரா ஷிஃப்லிங்.
 
உலக அளவில் தடுப்பூசி தேவை அதிகமாக இருந்தாலும்கூட வேறு துறைகளில் இருப்பதுபோல புதிய நிறுவனங்கள் சட்டெனக் இறங்கி எதையும் செய்துவிட முடியாது என்கிறார் அவர்.
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் Biological E என்ற நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு நிதியுதவி அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் வரும் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் நூறு கோடி டோஸ் தடுப்பு மருந்தை அந்த நிறுவனத்தால்  உற்பத்தி செய்ய முடியும்.
 
கோவிஷீல்டு மற்றும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நோவாவாக்ஸ் ஆகிய தடுப்பூசிகளை மாதத்துக்கு 10 கோடி அளவில் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த  ஜனவரியில் சீரம் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் அந்தத் திட்டம் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
 
உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்துக்கு 20 கோடி டோஸ்களை வழங்க கடந்த ஆண்டில் சீரம் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அதன்படி மே  மாதத்துக்குள்ளாக சுமார் 10 கோடி டோஸ்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அரசின் தரவுகளின்படி இதுவரை 3 கோடி டோஸ் மட்டுமே  வழங்கப்பட்டிருக்கிறது.
 
இவை தவிர 90 கோடி கோவிஷீல்ட் மற்றும் 14.5 கோடி நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை வணிக ரீதியில் வழங்குவதற்கும் சீரம் நிறுவனம் உடன்பாடுகளைச்  செய்திருக்கிறது.
 
உலகளாவிய கவி எனப்படும் உலக தடுப்பூசி கூட்டமைப்புக்கு, தடுப்பூசிகளை வழங்குவதற்கு சீரம் நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
 
தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தங்களை பின்பற்றுவது குறித்து ஆஸ்ட்ராசெனீகா நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக சீரம்  நிறுவனம் அண்மையில் கூறியது. எனினும் அதுபற்றிய விரிவான தகவல்களைத் தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்