தமிழ்நாட்டு பட்டியலில் கொல்கத்தா கொரோனா நோயாளிகளை காட்டிய Medall ஆய்வகம்
சனி, 22 மே 2021 (13:31 IST)
வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாகக் காட்டி, தமிழகத்தில் கொரோனா அதிகரித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக Medall ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் சேர்த்ததாக சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் Medall என்ற ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸில் உள்ள தகவல்களின்படி, கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட மாதிரிகளாகக் காட்டி, அவை ஐசிஎம்ஆர் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. மே 19, மே 20 ஆகிய நாட்களில் 'கொரோனா நெகட்டிவ்' என வந்த நான்காயிரம் முடிவுகளை, 'கொரோனா பாசிடிவ்' என மாற்றி ஐசிஎம்ஆர் பதிவேட்டில் இந்த ஆய்வகம் பதிவுசெய்துள்ளது.
மேலும் தினமும் 'கொரோனா பாசிடிவ்' என பதிவுசெய்யப்படும் நோயாளிகளின் விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட தவறுகளை தமிழக பொது சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் வேண்டுமென்றும், அலட்சியமாகவும் இந்த ஆய்வகம் தவறுகளில் ஈடுபட்டுள்ளதாக பொது சுகாதரத் துறை குற்றம்சாட்டியுள்ளது. வேறு மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக் கணக்கு உயர்ந்தது.
இதுபோல தவறான எண்ணிக்கையைத் தந்ததால், மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறாகக் கணக்கிட நேரிட்டது. இதன் மூலம் மத்திய - மாநில அரசுகள் இந்த நோயைத் தடுக்க செய்த முயற்சிகளில் தடங்கல் ஏற்பட்டன.
கொரோனா இல்லாதவர்களுக்கு கொரோனா இருக்கிறது என பதிவுசெய்ததால் பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பம், பதற்றம், மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டன. தவறாக முடிவு சொல்லப்பட்டவர்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.