கொரோனா: காகம், கழுகுக்கு இரையாகும் கங்கையில் 'புதைக்கப்பட்ட' உடல்கள்

சனி, 15 மே 2021 (10:02 IST)
பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
கான்பூர், உன்னாவ் மற்றும் ஃபதேபூரில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிலர் தங்கள் பாரம்பரியத்திற்கு ஏற்ப உடல்களை அடக்கம் செய்கிறார்கள் என்று நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இடுகாடுகளில் கூட்டம் மற்றும் ஈமக்கிரியைகளுக்கு ஆகும் அதிக செலவு காரணமாக மக்கள் இறந்தவர்களை ஆற்றங்கரை மணலில் அடக்கம் செய்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த உடல்கள் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் உடலா என்று உள்ளூர் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
 
புதன்கிழமையன்று உன்னாவில் கங்கை ஆற்றின் கரையில் சில படித்துறைகளுக்கு மேலே ஏராளமான காகங்களும் கழுகுகளும் சுற்றிக்கொண்டிருப்பதை கண்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சி பயங்கரமானதாக இருந்தது.
 
பல உடல்கள் கங்கை நதிக்கரையில் மணலில் புதைக்கப்பட்டிருந்தன. வெளியே தெரிந்துகொண்டிருந்த சில உடல்களை நாய்கள் கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. சில உடல்கள் மணலில் ஆழமாக புதைக்கப்படாததால் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டன.
 
உன்னாவின் சுக்லகஞ்சில் கங்கை கரையில் பல படித்துறைகள் உள்ளன. அங்கு மணலால் கட்டப்பட்ட அத்தகைய பல சமாதிகள் புதன்கிழமை காணப்பட்டன.
 
கடந்த பல நாட்களாக கிராமங்களில் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் இங்குகொண்டுவந்து புதைத்துவிட்டுச்செல்கிறார்கள் என்பது இந்தப்படங்கள் வைரலானபோது தெரியவந்தது.
 
இது பல நாட்களாக நடந்து வருகிறது, ஆனால் மக்களுக்கு இது தெரியவில்லை என்று சுக்லகஞ்சில் வசிக்கும் தின்கர் சாஹு கூறுகிறார்.
 
"இடுகாடுகளில் கூட்டம் மற்றும் மரக்கட்டைகளின் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக ஏழைகள் உடல்களை அடக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். இது வழக்கத்தில் இல்லை என்றாலும் அவ்வாறு செய்தவர்கள் ஏதோ கட்டாயத்தின் பேரில்தான் செய்திருக்கிறார்கள், " என்று தின்கர் சாஹூ விளக்கம் அளிக்கிறார்.
 
சுற்றியுள்ள கிராமங்களில் மக்களிடையே உடல்களை அடக்கம் செய்யும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது என்றும் ஆனாலும் அது பற்றி விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் உன்னாவ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் தெரிவிக்கிறார்.
 
"ஆற்று மணலில் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் சடலங்கள் தேடப்பட்டு வருகின்றன. பாரம்பரியத்தின்படி சிலர் உடல்களை எரிப்பதில்லை, அடக்கம் செய்கிறார்கள் . ஆனால் இத்தனை அதிக எண்ணிக்கையில் உடல்கள் காணப்படுவது ஒரு தீவிரமான விஷயம். விசாரணைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது."
 
"கிடைக்கும் தகவலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், புதைக்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பவர்களிடம், உடல்களை ஆழமாக அடக்கம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இப்படிச்செய்யும்போது விலங்குகளால் பாதிப்பு ஏற்படாது. இறந்தவர்களுக்கு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும். வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் இதைச் செய்கிறவர்களுக்கு, மரக்கட்டைகள் மற்றும் இதரப்பொருட்கள் கிடைப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
உன்னாவின் பக்ஸர் படித்துறையிலும் மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
உன்னாவ், ஃபதேபூர் மற்றும் ராய் பரேலி போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் இறுதி சடங்குகளை செய்ய இங்கு வருகிறார்கள். சிலருக்கு இங்கு அடக்கம் செய்யும் பாரம்பரியம் உள்ளது என்று கூறுகிறார் ரவீந்திர குமார். இருப்பினும், இந்தப் பாரம்பரியம் ஒரு சில சாதிகளில் மட்டுமே உள்ளது. அதுவும் ஈமக்கிரியை செய்ய அவர்களிடம் வசதி இல்லாத நிலையிலேயே இப்படி செய்யப்படுகிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
கிராமங்களில் சிலர், குழந்தைகளின் உடல்களையோ அல்லது வயதானவர்களின் உடல்களையோ எரிப்பதற்கு பதிலாக புதைக்கிறார்கள் என்று உன்னாவின் உள்ளூர் பத்திரிகையாளர் விஷால் பிரதாப் சிங் கூறுகிறார்., "சில நேரங்களில் மக்கள் தங்கள் வயல்களிலும் உடல்களை அடக்கம் செகின்றனர். சில சமூகங்களிடையே இந்த பாரம்பரியம் உள்ளது. ஆனால் இதுபோன்றவர்கள் மிகக் குறைவு," என்கிறார் அவர்.
 
உன்னாவைத் தவிர கான்பூரில் கங்கைக் கரையோரம் உள்ள பல இடங்களிலும் இதுபோன்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
"பில்ஹோர் வட்டாரத்தின் கேரேஷ்வர் படித்துறையின் மணலில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நிலைமையும் உன்னாவ்வை ஒத்திருக்கிறது. ஒரு பெரிய பகுதியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களை பார்க்க முடிகிறது. அக்கம்பக்க மக்கள் இதைப் பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை. இந்தப்பகுதியில் உள்ள யாருக்குமே அடக்கம் செய்யும் பாரம்பரியம் இல்லை அல்லது அவர்கள் இங்கு சடலங்களை புதைப்பதைக் கண்டதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் பாரம்பரியம் அது போல் இல்லை, "என்று கான்பூரில் உள்ள மூத்த பத்திரிகையாளர் பிரவீன் மொஹ்தா கூறுகிறார்.
 
கான்பூரில், பில்ஹோரில் உள்ள கேரேஷ்வர் படித்துறையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து எந்த அதிகாரியும் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த சில வாரங்களில் கிராமங்களில் ஏராளமான இறப்புகள் நிகழ்ந்தன, இறந்த உடல்களை தகனம் செய்ய மக்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் ஏராளமான உடல்கள் கங்கை ஆற்று மணலில் புதைக்கப்பட்டன என்றும் சொல்கிறார் பிரவீன் மொஹ்தா.
 
"உன்னாவ் மற்றும் ஃபதேபூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் ஏராளமான மக்கள் இறந்துள்ளனர். கங்கைக்கரையில் ஈமக்கிரியைகள் செய்ய கட்டப்பட்டுள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்குகளுக்கு அதிக நேரம் எடுக்கத்தொடங்கியதால், ராய் பரேலி, ஃபதேபூர் மற்றும் உன்னாவ் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட உடல்கள், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பக்ஸர் படித்துறையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள கங்கை ஆற்று மணலில் அடக்கம் செய்யப்பட்டன. இங்கே ஒவ்வொரு நாளும் 10-12 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தது, ஆனால் இப்போது தினமும் நூறுக்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. "என்று உன்னாவ்வில் இறுதி சடங்குகளை செய்யும் புரோகிதர் விஜய் ஷர்மா தெரிவிக்கிறார்.
 
புதைக்கப்பட்டவர்களின் இறப்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டதாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா என்பது தெரியவில்லை.
 
இந்தப்படித்துறைகளுக்கு, அருகிலுள்ள கிராமங்களிலிருந்துதான் மக்கள் வருவார்கள், ஆனால் இப்போது இறந்த உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
 
மணலில் புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் பற்றிய தகவல் வெளியானதை அடுத்து உன்னாவ் மற்றும் ஃபதேபூர் மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை மாலை, சம்பவ இடத்தை அடைந்தனர்.
 
தற்போது இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு சடலங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. மக்கள் இனி இதுபோல உடல்களை புதைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நிர்வாகம், கண்காணிப்பு குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்