சீன விமான விபத்து: “என் மகன் சீக்கிரம் வந்துவிடுவான்” – காத்திருக்கும் தாய்

செவ்வாய், 22 மார்ச் 2022 (16:35 IST)
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், குவாங்சு விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார், விமானக்குழுவினர் யார் என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுள், 6 பேர் கொண்ட குழு, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பயணித்ததாக தெரியவந்துள்ளது.

அக்குழுவில் தன்னுடைய சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களும் இருந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்” என, அவர் Jiemian News ஊடகத்திடம் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் பயணித்த டான் என்பவரின் அலுவலக சகா ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், டான் குடும்பத்தினரிடம் தான் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

“அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். டானுக்கு 29 வயதுதான் ஆகிறது” என்றார்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானத்தில் பயணித்தோரின் குடுபத்தினரை அழைத்துச் செல்லும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்