பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகளை 'ஆசை காட்டி' தன் பக்கம் இழுக்கும் சீனா
புதன், 19 அக்டோபர் 2022 (11:12 IST)
பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பெருமளவிலான பணம் அவர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் முன்னாள் ராணுவ விமானிகள் 30 பேர் வரை, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சென்றதாகக் கருதப்படுகிறது. சீன ராணுவத்தில் பணியாற்றும் அந்த முன்னாள் ராணுவ விமானிகளுக்கு பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானிகளை ஆசைவார்த்தை கூறி ஈர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சமீபத்தில் அந்த முயற்சி அதிகரித்து வருவதாகவும் மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரிட்டன் சட்டத்தை மீறவில்லை. ஆனாலும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளிலுள்ள அதிகாரிகள் இதைத் தடுக்க முயல்கின்றனர்," என்றார்.
"இதற்கான லாபகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. பணம் ஒரு வலுவான உந்துதல்," என்று ஓர் அதிகாரி கூறுகிறார். சிலருக்கு ஆண்டொன்றுக்கு 2,70,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 23 லட்சம் ரூபாய்) வரை சம்பளம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.
ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள், மேற்கத்திய விமானங்கள் மற்றும் விமானிகள் செயல்படுகின்ற விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். தைவான் விவகாரத்தில் உண்டாக்கியுள்ள மோதல் நிலைமை போன்ற சூழல் போல ஏதாவது உண்டானால் சீனாவிற்கு அது முக்கியமானதாக இருக்கும்.
"அவர்கள் அந்த அறிவைப் பகிரக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான குழுவாக இருக்கிறார்கள். சீன ராணுவ விமானப்படை தந்திரோபாயங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு சிறந்த அனுபவமுள்ள மேற்கத்திய விமானிகளை எடுத்துக் கொள்கிறது," என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார்.
2019ஆம் ஆண்டில் சிறிய எண்ணிக்கையில் முன்னாள் ராணுவ விமானிகள் பணியமர்த்தப்பட்டது குறித்து பிரிட்டனுக்கு முதல்முறையாகத் தெரிய வந்தது. அதில் அப்படி பணியமர்த்தப்பட்டவர்களில் தனித்தனி நபராகக் கையாளப்பட்டனர். கோவிட்-19 பேரிடர் அந்த முயற்சிகளைக் குறைத்தது. அந்த நேரத்தில் சீனாவிற்கு பயணம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை என்பதால் அந்த முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதுவே இப்போதைய இந்த எச்சரிக்கைக்கு வழிவகுத்தது.
"இந்த முயற்சி அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். இதுவொரு தொடர்ச்சியான பிரச்னை," என்று ஒரு மேற்கத்திய அதிகாரி செய்தியாளர்களிடம் ஒரு மாநாட்டில் கூறினார். இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். ஆனால், இதுவரை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
வேகமான ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்களில் அனுபவம் பெற்ற விமானிகள், ராயல் விமானப்படை மட்டுமல்ல, ராணுவம் முழுவதும் இருந்து வருகிறார்கள். அவர்கள் டைஃபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹேரியர்ஸ், டொர்னாடோஸ் போன்ற விமானங்களில் பறந்தவர்கள்.
எஃப்-35 விமானிகள் இதில் ஈடுபடவில்லை என்றாலும் சீனா அவர்கள் மீதும் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. சில விமானிகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் சில காலத்திற்கு முன்பு ராணுவத்தை விட்டு வெளியேறினர். இவர்கள் போக, மற்ற நட்பு நாடுகளின் விமானிகளும் குறி வைக்கப்படுகின்றனர்.
இவர்களைச் சேர்த்துக்கொள்ள இருக்கும் இடைத்தரகர் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் தென்னாப்ரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட விமானப் பயிற்சி அகாடமி இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தவொரு விமானியும் அலுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறியதாகவோ, அவர்கள் ஏதேனும் குற்றம் செய்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே, இந்தச் செயல்பாட்டைத் தடுப்பது, தற்போதைய ஊழியர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்குத் தெரிவிப்பது, முக்கிய தகவல்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் கடமைகளைப் பணியாளர்களுக்கு நினைவூட்டுவது ஆகியவையே இந்த எச்சரிக்கையை விடுத்ததன் நோக்கம்.
"சீன மக்கள் குடியரசில் உள்ள மக்கள் விடுதலை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பிரிட்டன் ஆயுதப்படையின் இந்நாள் மற்றும் முன்னாள் விமானிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான சீனாவின் ஆட்சேர்ப்பு திட்டங்களை நிறுத்த நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"பணிபுரிபவர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்கள் அனைவரும் ஏற்கெனவே லுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். மேலும் பாதுகாப்புத் துறை முழுவதும் இருக்கின்ற ரகசியம் காக்கும் ஒப்பந்தங்கள், தகவலை வெளிப்படுத்த முடியாத ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். அதே நேரத்தில், இந்த விஷயம் உட்பட, சமகால பாதுகாப்பு குறித்த சவால்களைச் சமாளிக்க கூடுதல் வசதிகளை உருவாக்கும் ஒன்றாக புதிய தேசிய பாதுகாப்பு மசோதா இருக்கும்."