CAA - NRC போராட்டம்: கைது செய்யப்பட்ட பெற்றோரின் வருகைக்காக காத்திருக்கும் 14 மாதக் குழந்தை
சனி, 28 டிசம்பர் 2019 (16:04 IST)
உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை தொடர்பாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் வாரணசியைச் சேர்ந்த ரவி சேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா ஆகியோர் அடங்குவர்.
இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களது பதினான்கு மாத குழந்தை தனது பெற்றோர் சாக்லேட் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறார்.
டிசம்பர் 19 அன்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வாரணசியில் ஏராளமான வன்முறைகள் நடந்தன.
வன்முறையை அடுத்து, ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினரின் அத்துமீறல் மற்றும் வன்முறை அரங்கேறியதைக் காட்டும் புகைப்படங்கள் வெளிவருகையில், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தில் வன்முறை நடக்கும் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரவி சேகரும் அவரது மனைவி ஏக்தாவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக பணியாற்றுபவர்கள். இருவரும் வாரணாசியில் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாரணாசியில் மஹ்முர்கஞ்சில் வசிக்கும் ரவியும், ஏக்தாவும், தங்கள் பிஞ்சுக் குழந்தையை, குழந்தையின் பாட்டி மற்றும் பெரியம்மாவிடம் ஒப்படைத்து விட்டு பேரணியில் கலந்து கொள்ளச் சென்றனர்.
ரவியின் வயதான தாயார் ஷீலா திவாரியுடன் பேசினோம். "எனது மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. காவல்துறையினர் அவரை ஏன் கைது செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இருவரும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இருவரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்வார்கள்" என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த பால்மணம் மாறாக் குழந்தை தாய் இல்லாமல் இருக்கிறாள். நாங்கள் அவளை நன்றாகக் கவனித்துக் கொள்கிறோம், ஆனால் இந்தப் பிஞ்சுக் குழந்தை தாய் இல்லாமல் எப்படி வாழ முடியும்? நீங்களே சொல்லுங்கள்" என்று தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.
பிரிவு 144 ஐ மீறுவதாகக் கூறி, வாரணாசியின் பெனியாபாஹ் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரவி சேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா டிசம்பர் 19 அன்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
ரவியின் மூத்த சகோதரர் சஷிகாந்த்திடம் பிபிசி பேசியது. "அறுபது எழுபது பேர் கொண்ட குழுவுடன் அவர்கள் பேரணியில் கலந்து கொண்டார்கள். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தது. நிலைமை இயல்பானதும் அவர்களை விட்டுவிடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்திருந்த பின்னர் டிசம்பர் 21 அன்று பல பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் மீதான குற்றமும், வழக்குப் பதிவு செய்த சட்டப்பிரிவுகளும் வலுவாக இல்லை என்றாலும், ஜாமீன் பெற முடியவில்லை" என்று சொல்கிறார் சஷிகாந்த்.
ரவிசேகர், ஏக்தா உள்ளிட்ட 56 பேர் மற்றும் சில அறியப்படாத நபர்களுக்கு எதிராக 332, 353, 341 போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பேரின் மீது வழக்கு இருக்கும்போது, ரவிசேகர் மற்றும் ஏக்தா என இருவருக்கு மட்டும் ஜாமீன் பெறுவதில் இருக்கும் சிக்கல்களை சஷிகாந்த் உணர்ந்திருக்கிறார். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பிஞ்சுக்குழந்தையை கவனித்துக்கொள்வதில் இருக்கும் சிக்கல்.
குழந்தை ஆயிரம் முறை அப்பா அம்மா எங்கே என்று கேட்டு அழுகிறாள். சமாதானம் சொன்னாலும், அப்பாவையும் அம்மாவையும் தேடுகிறாள். ஏங்கிப் போகிறாள்.
"எதுவும் சரியாக சாப்பிடுவதில்லை அல்லது குடிப்பதில்லை. பெற்றோரின் படத்தைப் பார்த்து அழுது கொண்டே சீக்கிரம் வா என்று சொல்லிப் புலம்புகிறாள். அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார்கள், வந்து விடுவார்கள் என்று பொய் கூறி, ஆறுதல் சொல்கிறோம். ஆனால், எப்போது இருவரும் வருவார்கள்? " என்று ரவிசேகரின் தாய் ஷீலா திவாரி கூறுகிறார்.
அதே நேரத்தில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக வாரணாசி போலீசார் கூறுகின்றனர்.
வாரணாசி மாவட்ட ஆட்சியர் சல்ராஜ் சர்மாவிடம் பேசினோம். "கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. சட்டவிரோதமாக மக்கள் கூடிவருவதால் நகரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. சுவரொட்டிகளில் ஆத்திரமூட்டும் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன" என்று அவர் கூறுகிறார்.
பிரதமர் நரேந்திர மோதியின் வாராணாசி நாடாளுமன்றத் தொகுதியில், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெனியாபாக் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் வந்தபோது, திடீரென்று நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அந்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டியிருந்தது.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுத் தடுக்கப்பட்டனர். அங்கு நீண்ட நேரம் வரை நிலைமை பதற்றமாக இருந்தது. இருப்பினும், ரவி சேகரின் குடும்பத்தின் தகவலின்படி, அவர்கள் குழப்பமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டனர்.
இருவரும் பல தேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளனர், மேலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல இடங்களில் விளக்கக்காட்சிகளையும் செய்துள்ளனர் என்று ரவிசேகரின் சகோதரர் சஷிகாந்த் கூறுகிறார்.