'பகாசூரன்' செய்வது நியாயமாரே..? - சினிமா விமர்சனம்

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:26 IST)
நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி.



பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது.

இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புறுத்தலின்பேரில் நிர்வாண விடியோக்களை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார். ஒரு தருணத்தில் அந்தப் பெண்ணின் வீட்டில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது, பாலியல் தொழில் செய்யும் கும்பல் அந்தப் பெண்ணை மிரட்டுகிறது. இதனால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்கிறார். இதைப் பற்றி ஓய்வுபெற்ற மேஜரான அவரது சித்தப்பா அருள் வர்மனுக்குத் (நட்டி) தெரியவருகிறது. அதைப் பற்றி அவர் ஆராயும்போதுதான் இதேபோல பல பெண்கள் சிக்கியிருப்பது தெரிகிறது. அவர்களை மீட்க இதுபோலவே பாதிக்கப்பட்ட ஒரு தகப்பனைத் தேடி அலைகிறார். அதே நேரத்தில், பெரம்பலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவரும் தனது மகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ள, அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்கிக் கொண்டிருக்கிறார் தெருக்கூத்து கலைஞரான பீமராசு (செல்வராகவன்). இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. தினமணி நாளிதழின் இணையதளம் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதரப் பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த 'பகாசூரன்' கெளரவம், ஒழுக்கம் என பெண்களையே எல்லாச் சுமைகளையும் சுமக்கச் சொல்லியிருக்கிறது" என விமர்சித்துள்ளது.

"50 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையிலிருந்து உருவாகியிருக்கிறது 'பகாசூரன்'. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களது அடுப்பங்கரையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை பதற்றத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதையாக வந்திருக்கிறது 'பகாசூரன்'. பெண்களைக் காக்க வேண்டும் என சொல்ல வரும் இயக்குநர் அதற்காக படத்தில் ஆபாச நடனம் வைப்பதெல்லாம் கண்முன் தெரியும் முரண். சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக ஒரு வசனம் வருகிறது. "ஊருக்குள்ளயே படிக்க வைக்க வேண்டியதுதான", "நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு கண்காணிக்கனும்" என இப்படிப்பட்ட வசனங்கள் படம் முழுக்க தொடர்கின்றன. எப்படி இருந்த செல்வராகவனை இப்படி வந்து நிறுத்திவிட்டனரே எனத் தோன்றுகிறது.

பல இடங்களில் படத்தின் லாஜிக் தடுமாறி நிற்கிறது. ஓய்வுபெற்ற மேஜராக வரும் நட்டி ஆதாரங்களைத் தேடி ஓடுகிறார். செல்வராகவன் அடுத்தடுத்து கொலைகளை நடத்திவிட்டு சென்றுகொண்டிருக்கிறார். இடையில் என்ன செய்கிறது காவல்துறை? சற்று பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல்பாதி சற்று கவனிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக நிற்கிறது இரண்டாம் பாதி. இணையத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது நோக்கமெனில் அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்திருக்கலாம். ஆனால் அந்த பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது போன்று காதலையும், பெண் உரிமை கோருவோரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் தனது தனிப்பட்ட அரசியல் எதிர்ப்பாளர்களை கதைக்குள் இழுத்துவிட்டதன் விளைவாக தடுமாறி நிற்கிறான் 'பகாசூரன்'. படத்தில் ராதாரவி தொடக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். பெண்களின் உரிமைகளைப் பேசுகிறார். அவர் எப்படி பின்னர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் என்பதை உங்களின் எதிர்பார்ப்பிற்கே விட்டுவிடுகிறோம். ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து வருவது, செல்போன்களை பயன்படுத்துவது என சின்ன சின்ன விஷயங்களைக் கூட அபாயமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது 'பகாசூரன்'. திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை காட்டும் வகையில் ஒரு பாடல் வருகிறது. அதில் செல்வராகவனின் மகள் அவரது காலை அழுத்திவிடுவார். அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இயக்குநருக்கு இருந்திருக்காதுபோல.

ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த 'பகாசூரன்' கெளரவம், ஒழுக்கம், இத்யாதி, இத்யாதி என பெண்களையே எல்லாச் சுமைகளையும் சுமக்கச் சொல்லியிருக்கிறது. படத்தின் இறுதியில் பேசும் செல்வராகவன், செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானதாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பேசும் நட்டி நமது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார். பெண்கள் வெளியில் வரட்டும். கல்வி கற்கட்டும். அவர்களின் உடலை இன்னும் ஆபத்தானதாகக் காட்டி அவர்களின் பாதைகளில் குழிவெட்டி காத்திருக்க வேண்டாம்" என விமர்சித்துள்ளது தினமணி நாளிதழின் விமர்சனம்.

எதிர்பார்ப்புடன் தொடங்கும் 'பகாசூரன்' தர்க்கப் பிழைகளாலும், பழமைவாதத்தாலும், எடுத்துக்கொண்ட கருத்தில் தடுமாற்றத்தை நிகழ்த்தியதாலும் எதிரிகளை வதம் செய்யவில்லை என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம்.

'ஆன்ட்ராய்டு மொபைலும், அதிலிருக்கும் டேட்டிங் ஆப்களும் ஆபத்தானவை' என்பதைச் சொல்லி இளம் பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற இயக்குநர் மோகன்.ஜியின் உன்னத முயற்சியை படம் புரிய வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலைகள், நட்டியின் இன்டலிஜன்ஸை காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், மறுபுறம் 'மேங்கோ கால் டாக்ஸி', கல்வித் தந்தை பட்டம் கொண்ட அரசியல்வாதி, கதைக்களமாக பெரம்பலூரை பயன்படுத்திக்கொண்டது என அரசியல் குறியீடுகளுக்கு இந்தப் படத்திலும் இயக்குநர் எந்த குறையும் வைக்கவில்லை.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக செல்லும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு அதன் லாஜிக் மீறல்களால் வேகத்தை இழக்கிறது. இரண்டு மாணவிகளின் தற்கொலையை மையப்படுத்தி எழுப்பப்பட்டிருக்கும் கதையில், அவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டதற்கான காரணங்கள் வலுவிழந்திருப்பதால் ஒட்டமுடியவில்லை. அதனால் எமோஷனல் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதைப்போலவே, படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் படு செயற்கைத்தனம். படத்தின் முதல் பாதியில் டேட்டிங் ஆப்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என கூறிவிட்டு, மையக் கருவான இரண்டாம் பாதியில் அதைப்பற்றி பேசாமல் மற்றொரு பிரச்சினையை கையிலெடுத்திருப்பதன் மூலம் படத்தின் நோக்கம் தெளிவில்லாமல் காற்றில் ஆடும் படகு போல இங்கும் அங்கும் அசைந்தாடுகிறது. 'சென்னை பாண்டிச்சேரிலாம் வேண்டாம்மா. அங்கலாம் வெள்ளைக்காரங்க மாதிரி ஆகிட்டாங்க மா. பெரம்பலூர்லனா படி மா…' என்ற வசனம் மூலம் இயக்குநர் நிறுவ முயல்வது என்ன?

பெண்களைப் பாதுகாப்பது குறித்து வகுப்பெடுக்கும் படத்தில் ஆபாச நடனம் வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்து பேசுவதாக சொல்லும் படத்தின் ஓரிடத்தில், ஆபாச வீடியோவுக்கு எதிராக காவல் நிலையம் செல்ல தயங்கும் செல்வராகவன், 'இது கௌரவப் பிரச்சினை, வீடியோ வெளியே விட்டா நமக்குதான் அவமானம்' என பிற்போக்கு வசனங்களை உதிர்த்து எதிராளிக்கு எனர்ஜி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்.

'அனல் மேலே பனித்துளி' போன்ற படங்கள் இதனை உடைத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும் வேளையில் 'பெண்களுக்கான விழிப்புணர்வு' படமான 'பகாசூரன்' செய்வது நியாயமாரே..? எல்லாம் காரணம் ஆன்ட்ராய்டு போன்களின் வருகையே என குறிப்பிட்டு, அதை பயன்படுத்துவது ஆபத்தானது, பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்பதை தீர்வாக முன்வைப்பது விவாதத்திற்குரியது" என்று விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசையின் இணையதள விமர்சனம்.

"மோகன் ஜி இயக்கும் படங்கள் எல்லாம் அவற்றின் கதைக் கருவுக்காக எப்போதுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. குழந்தைகளை வளர்ப்பது அவர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பது என்பது போன்றவையெல்லாம் அவருடைய முந்தைய படங்களிலும் வந்திருக்கின்றன. அவர் தொட்டுக்காட்ட விரும்பும் சமூகப் பிரச்சனைகளின் மற்றொரு விரிவாக்கம்தான் இந்த பகாசூரன்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.
 

"இளைஞர்களின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் எப்படி அவர்களது வாழ்க்கையைச் சுரண்டுகிறது என்பதைச் சொல்ல விரும்பும் நோக்கமெல்லாம் ஓரளவுக்கு சரிதான். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் பிரச்சாரமாக அமைந்துவிடுகிறது. மேலும், தொழில்நுட்ப தொடர்பான சமூக - பொருளாதார விவகாரங்கள் குறித்து எந்த புரிதலும் இன்றி, ஒரு அரைகுறை புரிதலுடன் கூடிய கருத்தும் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்துவது குறித்து பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்கிறது இந்தத் திரைப்படம். ஆனால், விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற குழந்தையின் சுதந்திரத்தை இது பறிக்குமென்பதால், இதனை முழுமையாக ஏற்க முடியாது.

இளம் வயதினர் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லியிருப்பது இந்தப் படத்தில் வரும் ஒரு நல்ல விஷயம். அதை இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். பெற்றோர் இன்னும் முற்போக்குச் சிந்தனையுடையவர்களாக இருந்தால் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் பரஸ்பர மரியாதையும் புரிதலும் ஏற்படும் என்பதையும் வலியுறுத்தியிருக்கலாம்.

திரைக்கதையைப் பொறுத்தவரை, மிகவும் நேரடியாக இருக்கிறது. துப்பறியும் த்ரில்லர் என்ற வகையில் இருந்தாலும் பல காட்சிகளை யூகிக்க முடிகிறது. ஆனால், இயக்குநரின் முந்தைய படங்களோடு ஒப்பிட்டால் பாத்திரப் படைப்புகளும் பின்னணியும் மேம்பட்டிருக்கின்றன. ஆனால், திரைக்கதை நேரடியாக இருப்பதால், பல பெரிய தருணங்கள்கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தன் மகளுக்காக தொடர்ந்து கொலைகளைச் செய்யும் பீமா ராசுவுடன் நாம் ஒன்ற முடிவதில்லை.

படத்தின் நீளமும் சற்று அதிகம். ஆனால், இந்தப் படம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தப் படத்தின் முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும் பிற்பாதி ஏனோதானோவென இருப்பதாகவே பல விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தவிர, மொபைல் போன்களைப் பயன்படுத்துவது, பெண்களை மட்டும் ஒழுங்காக இருக்கச் சொல்வது போன்ற பிரச்சாரங்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

ஆனால், திரைப்படக் கலை என்ற வகையில், மோகன் ஜியின் முந்தைய படங்களைவிட இந்தப் படம் மேம்பட்ட நிலையில் இருப்பதை எல்லா விமர்சனங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்