பிரதமர் மோதியோடு காட்டில் பயணித்தது குறித்து என்ன சொல்கிறார் பியர் கிரில்ஸ்?
சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:12 IST)
டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அத்தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தோன்றுவார் என்பது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் பியர் கிரில்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோதி குறித்தும் அவருடன் பயணித்தது குறித்தும் அவர் விவரித்தார்.
"நாங்கள் சென்ற உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் இருந்தும், அதனை தைரியமாக எதிர்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
நெருக்கடியான சூழலில் கூட அவர் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்ததை காண முடிந்தது.
எப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளுக்கு அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும்.
நாங்கள் அங்கிருந்தபோது கடினமான சூழ்நிலை நிலவியது. கனமழை பெய்தது. ஆனால், அந்தப் பயணம் முழுவதும் அனைத்து நெருக்கடியிலும் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தார் பிரதமர் மோதி. அதனை பார்க்க நன்றாக இருந்தது. நெருக்கடியின் போதுதான் ஒருவர் யார் என்று தெரியவரும்.
பயணம் முழுவதும் அவர் பணிவுடன் இருந்தார். கடுமையான மழை நேரத்திலும்கூட அவர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது.
மழையின்போது அவரது பாதுகாப்பு குழுவினர் குடையை எடுக்க முயற்சித்தபோது, 'இல்லை தேவையில்லை' என்று கூறினார் பிரதமர்.
பின்பு நதியை அடைந்தோம். அங்கு கிடைத்தவற்றை வைத்து நான் சிறு படகு தயார் செய்தேன். அதனை வைத்து நதியை கடந்துவிடலாம் என்று நான் நினைத்தபோது, அதில் பிரதமர் மோதி பயணிக்க அனுமதிக்க முடியாது என்று அவரது பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துவிட்டனர். ஆனால் மோதி பரவாயில்லை நாம் சேர்ந்து பயணிக்கலாம் என்றார்.
அவர் படகில் ஏறி என்னையும் ஏறச் சொன்னார். ஆனால், படகு மூழ்க ஆரம்பித்துவிட்டது. நான் நீந்தி அவரையும் தரையில் தள்ளிவிட்டேன். அவர் முழுவதும் நனைந்துவிட்டார். அப்போது பெய்த அந்த கனமழையிலும்கூட அவர் சிரித்து கொண்டே இருந்தார். அதுபோன்ற தருணங்களில்தான் ஒரு மனிதரைப் பற்றி உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
பிரதமர் மோதி சைவ உணவு சாப்பிடுபவர் என்பதால், அங்கு கிடைக்கும் பூச்சி போன்ற மாமிசங்களை சாப்பிட முடியாது. ஆனால், பழங்கள், செடிகள் போன்றவற்றை உண்டு உயிர் வாழலாம். பிரதமர் சிறு வயதில் காட்டுப் பகுதிகளில் இருந்திருக்கிறார் என்பதால் அவரால் அங்கு எளிமையாக இருக்க முடிந்தது.
நான் ஆரம்பத்தில் அவரிடம் உங்களை காட்டு விலங்குகள், மோசமான காலநிலை மற்றும் பெரும் நதிகளிடம் இருந்து காக்க வேண்டியது எனது வேலை என்று கூறினேன். அது உண்மைதான். அவர் என்னை நம்பினார். நாங்கள் ஒன்றாக பயணித்தோம்"
இவ்வாறு பியர் கிரில்ஸ் தெரிவித்தார்.
Bear Grylls in Wales(UK): Our team who was filming( Man vs Wild) was really on the edge, but the PM(Modi) was just very calm and I saw that throughout our journey. Whatever we were doing, he was very calm. That was cool to see...What shone bright for me was his humility pic.twitter.com/Fhf0ABEGQg