இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா?

திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:10 IST)
தங்கள் நாட்டில் புதிய கருவிகளுடன் சமீபத்தில் செயல்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என இரான் நாட்டின் உச்சபட்ச அணு சக்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என அலி அக்பர் சலேஹி கூறவில்லை. ஆனால் இந்த தாக்குதலால் நேற்று (ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை) தெற்கு இரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது.
 
இஸ்ரேல் நாட்டின் அரசு ஊடகம், இது இஸ்ரேலிய சைபர் தாக்குதலால் நடந்ததாக, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் குறிப்பிடுகிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை.
 
ஆனால் கடந்த சில நாட்களாகவே, இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறித்து அதிகப்படியாக எச்சரித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
 
2015இல் இரானுடன் பிற நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 2018இல் விலகியது. அதை மீண்டும் செயல்படுத்த வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில் இந்தத் நிகழ்வு நடந்துள்ளது.
 
கடந்த சனிக்கிழமை, இரான் நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின்  இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். (மையவிலக்கு விசையைப் பயன்படுத்தி ஒரு திரவத்தின் பல்வேறு கூறுகளைப் பிரிக்க இந்தக் கருவி பயன்படும்.) அந்நிகழ்ச்சி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
 
யுரேனியத்தைச் செறிவூட்ட மைய விலக்கு சுழற்சிக் கருவிகள் தேவை. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தான் அணுசக்தி உற்பத்தி மையங்களில் எரிபொருளாகவும், அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் பயன்படும்.
 
வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்த, குறிப்பிட்ட அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மட்டுமே இரான் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் முடியும் என்று 2015 அணு சக்தி ஒப்பந்தம் இரானை கட்டுப்படுத்துகிறது. அணு சக்தி மையத்தில் புதிய கருவிகளை இரான் நிறுவியது அந்த  ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாக அமைந்தது.
 
இரான் என்ன கூறுகிறது?
 
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு தாக்குதல் நடந்ததாகவும், அதில் அணுசக்தி மையத்தின் மின்சார நெட்வொர்க்குகளில் பிரச்னை ஏற்பட்டதாகவும், நேற்று (ஏப்ரல் 11,  ஞாயிற்றுக்கிழமை) இரானின் அணுசக்தி அமைப்பான 'அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஆஃப் இரான்'-ன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி  கூறினார்.
 
இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவோ, எந்த வித கசிவோ ஏற்படவில்லை என, இரானின் ஃபார்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார் கமால்வண்டி. மேற்கொண்டு எந்த விவரங்களையும் கூறவில்லை.
 
பிறகு, இரானின் அரசு தொலைக்காட்சி சேனலில் 'அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஆஃப் இரான்'-ன் தலைவர் அலி அக்பர் சலேஹியின் தரப்பிலிருந்து வெளியான ஒரு செய்திக் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் இந்த சம்பவத்தை தெளிவாக விளக்கி இருக்கிறார். இது ஒரு தாக்குதல் எனவும் இது அணுசக்தி தீவிரவாதமெனவும் அவர் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
"இந்த இழிவான நடவடிக்கைகளை இரான் கண்டிக்கிறது. அதோடு இந்த அணுசக்தி தீவிரவாதம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) நடவடிக்கை  எடுக்க வேண்டும் என இரான் வலியுறுத்துகிறது" என அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
"இந்த நாச காரியத்தைச் செய்தவர்களுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமை இரானுக்கு இருக்கிறது" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
இப்படி ஒரு சம்பவம் நடந்தது தங்களுக்குத் தெரியும் என சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது, ஆனால் மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து எதையும்  கூறவில்லை.
 
கடந்த ஜூலை மாதம் கூட, இதே நடான்ஸ் அணுசக்தி மையத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அது மத்திய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளை ஒன்றாக இணைக்கும் பட்டறையை (Assembly workshop) பாதித்தது. அது கூட ஒரு தாக்குதல் எனக் கூறப்பட்டது.
 
இஸ்ரேலுக்கு இதில் என்ன தொடர்பு?
இரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சாரப் பிரச்னை ஏற்பட்டதற்கு, இஸ்ரேலின் சைபர் தாக்குதல் தான் காரணம் என, இஸ்ரேலின் அரசு ஊடகமான கன், பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுத் துறை அதிகாரி கூறியதாக குறிப்பிடுகிறது.
 
தி ஹாரெட்ஸ் என்ற நாளிதழும், இரானில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளது.
 
"இரான் தனது அணு ஆயுதத் திறனில் முன்னறி வரும் சூழலில் இந்த நிகழ்வு விபத்தாக நடக்கவில்லை என்று கருதுவதில் நியாயம் உள்ளது. அமெரிக்கா இரான்  மீதான தடைகளை நீக்குவது குறித்து நடந்துவரும் பேச்சுவார்த்தைகளை ஒட்டி, வேகம் பிடித்துள்ள அணு ஆயுதப் போட்டியை மட்டுப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாசவேலையாக இது இருக்கலாம்," என்று ஒய்நெட் எனும் செய்தி இணையதளத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான வல்லுநர் ரான்  பென்-ஈஷய் தெரிவிக்கிறார்.
 
"இரான் மற்றும் அதன் ஆயுத முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் மிகப் பெரியவை" என நேற்று (ஏப்ரல் 11 ஞாயிற்றுக்கிழமை) இரவு கூறினார் இஸ்ரேலின்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.
 
மேலும் பேசியவர் "இன்று இருக்கும் சூழல், நாளையும் அப்படியே நிலவும் என்கிற அவசியமில்லை" என கூறினார். இதில் அவர் இரான் குறித்து எதையும்  நேரடியாகக் குறிப்பிடவில்லை.
 
கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்கிற இரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் டிரம்பு அமெரிக்காவை விலக வைத்ததிலிருந்து, இந்த  ஒப்பந்தம் மோசமான நிலையில் இருக்கிறது.
 
ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், இந்த ஒப்பந்தத்தை மீட்டுக் கொண்டு வர பெரிய அளவில் ராஜரீக ரீதியிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
அமெரிக்கா, இந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததை குறித்து எதிர்ப்பு தெரிவித்தது இஸ்ரேல். இரான் உடனான புதிய ஒப்பந்தத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
அணு சக்தி ஒப்பந்தத்துக்கு என்ன ஆனது?
 
அணு சக்தி ஒப்பந்தத்தின்படி, இரான் 3.67 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 90  சதவீதம் மற்றும் அதற்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து அணு ஆயுதங்களை உருவாக்கலாம்.
 
இந்த அணு சக்தி ஒப்பந்தம் ஒரு பெரிய கற்பனைக் கதை. நாசகாரியங்களைச் செய்த அரசு ஓர் அமைதியான அணு சக்தி திட்டத்தை விரும்புகிறது என  விமர்சித்தார் டிரம்ப். அதோடு இரானை அடிபணிய வைக்க, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி இரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார்.
 
தங்களுக்கு அணு ஆயுதங்கள் வேண்டாம் எனக் கூறியது இரான். அதோடு டிரம்பின் வாதங்களை ஏற்றுக் கொள்ளாத இரான், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்  விதத்தில், அவ்வொப்பந்தத்தில் குறிப்பிட்ட பல விஷயங்களை மீறத் தொடங்கியது.
 
யுரேனியத்தைச் செறிவூட்ட இரான் புதிய மேம்படுத்தப்பட்ட கருவிகளை செயல்படுத்தத் தொடங்கியது. தற்போது இரான் தன் U-235 யுரேனிய ஓரிடத்தானை 20  சதவீதம் வரை செறிவூட்டி வருகிறது. (U-235 யுரேனியத்தில் இருந்து வேறுபட்ட இயற்பியல் பண்புகளையும், ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும்  கொண்டது.) U-235 மிகவும் அதிகமான பிளவுறும் தன்மை உடையது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்