டொனால்ட் டிரம்ப் 2024இல் அதிபர் போட்டியில் மீண்டும் களமிறங்குவதாக அறிவிப்பு!

புதன், 16 நவம்பர் 2022 (11:05 IST)
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
 
அமெரிக்கர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
 
ஃப்ளோரிடாவில் இருக்கும் அவருடைய மார்-அ-லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக டிரம்ப் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
 
மத்திய தேர்தல் ஆணையத்திடம் டொனால்ட் டிரம்பின் குழு தாக்கல் செய்த ஆவணம், அவர் சார்பாகப் பங்களிப்பு மற்றும் செலவுகளைச் செய்வதற்கு ஒரு முதன்மை பிரசாரக் குழுவை நியமிக்கிறது.
 
அதிபர் தேர்தலுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்த சில நிமிடங்களில் அவர் பேசத் தொடங்கினார்.
 
ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் டிரம்பை “அமெரிக்காவின் அடுத்த அதிபர்” என்று அறிமுகப்படுத்தியது. பின்னர் டிரம்ப் பேசத் தொடங்கினார்.
 
அதிபர் பைடன் குறித்துப் பேசி தனது உரையைத் தொடங்கினார் டிரம்ப். தனது ஆதரவாளர்களிடம் “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என்று கூறினார்.
 
டிரம்ப் பதவியில் இருந்தபோது தாம் செய்ததாகக் கூறும் சாதனையைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். “நான்கு குறுகிய ஆண்டுகளில், அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். அனைவரும் முன்னெப்போதும் இல்லாத வகையில் செழித்து வந்தனர்,” என்று கூறினார்.
 
கொரோனா பேரிடரின்போது வீழ்ச்சியடைந்த பிறகு, அவர் பதவியை விட்டு வெளியேறும்போது அமெரிக்க பொருளாதாரம் விரைவாக மீண்டு கொண்டிருந்ததாகக் கூறியவர், “இப்போது நாம் வீழ்ச்சியடையும் ஒரு தேசமாக இருக்கிறோம்,” என்று அதிகரித்துள்ள பணவீக்க விகிதத்தை மேற்கோள் காட்டிக் கூறினார்.
 
தொற்றுநோய் பேரிடருக்கு முன்பே, சில சமீபத்திய முன்னாள் அதிபர்களைக் காட்டிலும் டிரம்பின் கீழ் பொருளாதாரத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி குறைவாக இருந்தது.
 
“அமெரிக்காவை மீண்டும் மகத்துவமானதாக, பெருமையானதாக மாற்றுவதற்காக இன்றிரவு நான் அமெரிக்க அதிபருக்கான என்னுடைய போட்டியிடலை அறிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
 
“எனவே இனி 2024ஆம் ஆண்டு தேர்தல் நாள் வரை, இதுவரை யாரும் போராடாததைப் போல் நான் போராடுவேன். நமது நாட்டை உள்ளிருந்து அழிக்க முயலும் தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகளைத் தோற்கடிப்போம்,” என்று தனது உரையின்போது பேசினார்.
 
உண்மை சரிபார்ப்பு: இதுவரை இல்லாத வேகமான மீட்சி டிரம்ப் தலைமையில் நடந்ததா?
 
தமது ஆட்சிக் காலத்தில் இதுவரை இல்லாத வேகமான பொருளாதார மீட்சி இருந்ததாக டிரம்ப் கூறியது உண்மையா என்று அமெரிக்காவின் பிபிசி செய்தியாளர் மைக் வெண்ட்லிங் எழுதியுள்ளார்.
 
“இதுவரை பதிவு செய்யப்படாத வேகமான பொருளாதார மீட்சிக்கு” தான் தலைமை வகித்ததாக டிரம்ப் கூறினார்.
 
2020இன் தொடக்கத்தில் மந்தநிலை ஆழமானதாக இருந்தது. டிரம்ப் நிர்வாகம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் கைகளில் நிவாரணத்தைக் கொண்டு சேர்த்தது.
 
ஆனால், டிரம்ப் வெளியேறியபோது பொருளாதார வளர்ச்சி நிற்கவில்லை. உண்மையில் அது 2021 வரை தொடர்ந்தது. அதனால் தான் டிரம்பை தொடர்ந்து வந்த ஜோ பைடன் மீட்புக்கான பெயரைப் பெறுகிறார்.
 
கோவிட் பேரிடர் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்ட பெரிய பணி நிறுத்தத்தால் ஏற்பட்ட மந்தநிலையின் தன்மை காரணமாக மீள் எழுச்சியின் வேகம் அதிகமாக இருந்தது. டிரம்பின் கொள்கைகள் மீட்சிக்கு உதவவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அசாதாரண மந்தநிலை நிச்சயமாக மீண்டும் வேகமெடுத்து முன்னேற்றம் கண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்