வயதான நிலையில், சென்னைக்கு வந்து அஸ்வின் என்ற பெயரில் தங்கியிருக்கும்போது அவருக்கு ரம்யா (தமன்னா) என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ரம்யாவும் தன்னைக் காதலிப்பதாக நினைக்கிறார். ஆனால், முடிவில் ரம்யா, மற்றொரு இளைஞரை (அதுவும் சிம்புதான்) காதலிப்பதாகச் சொல்கிறார். இதனால், அஸ்வின் குடித்துவிட்டு, ரம்யாவைப் பழிவாங்கப் போவதாகச் சொல்கிறார். அதை இரண்டாவது பாகத்தில் பார்க்க வேண்டுமாம்.
கதை, திரைக்கதை, படத்தொகுப்பு, வசனம் என எல்லாவிதத்திலும் தோல்வியடைந்திருக்கும் ஒரு படம். மதுரையிலிருந்து தப்பிக்கும் மைக்கேல், துபாயில் போய் பெரிய டானாகிவிடுகிறார் என்கிறார்கள். அவர் என்ன செய்து டான் ஆனார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை ஒரு பெண் போலீஸ் அதிகாரி (கஸ்தூரி) தலைமையில் பெரிய போலீஸ் படையே உலகம் முழுக்கத் தேடுகிறதாம். ஆனால், அவர் சென்னையில் ரம்யாவை காதலித்துக்கொண்டிருப்பாராம். இப்படியாக படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளைப் பற்றிப் பேசினால் பல பக்கங்களுக்கு எழுதிக்கொண்டேயிருக்கலாம்.
ஆனால், படம் நெடுக பெண்கள் குறித்து சிம்பு வகுப்பெடுத்துக்கொண்டே இருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தன் முதல் படத்திலும் இதே வேலையைத்தான் செய்தார். இந்தப் படத்திலும் இதையே கேட்கவேண்டியிருக்கிறது. அதுவும் படத்தின் முடிவில், பெண்களைப் பற்றி ஒரு கால் மணி நேர உரையாற்றுகிறார் சிம்பு. ரொம்ப ரொம்ப நெளியவைக்கிறது. தவிர, ஆபாச வசனங்களும் ஆங்காங்கே. இந்தப் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.