ஏஜென்ட் கண்ணாயிரம் - சினிமா விமர்சனம்

சனி, 26 நவம்பர் 2022 (10:01 IST)
நடிகர்கள்: சந்தானம், ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனீஸ் காந்த், ரெடின் கிங்க்ஸ்லி, புகழ், இ. ராமதாஸ், குரு சோமசுந்தரம்; ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி; இயக்கம்: மனோஜ் பீதா.
 
  2019ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ ஆத்ரேயா' படத்தின் ரீ மேக்தான் இந்த 'Agent கண்ணாயிரம்'.
 
படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா, இதற்கு முன்பாக 'வஞ்சகர் உலகம்' படத்தை இயக்கியவர்.
 
சந்தானம் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் ஏதும் சரியாக ஓடாத நிலையில், தெலுங்கில் ஹிட் அடித்த இந்தப் படத்தின் ரீ - மேக்கில் சந்தானம் நடிக்கிறார் எனும்போது,  படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
 
படத்தின் கதை இதுதான்: தன் தாயின் இறந்த சேதியைக் கேட்டு சொந்த ஊருக்கு வரும் கண்ணாயிரத்தால், தன் தாயின் உடலைக்கூட பார்க்க முடியவில்லை.
 
இதற்கிடையில் ஊருக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் சடலங்கள் கிடக்கின்றன. இந்த வழக்கை காவல்துறை சரியாக கண்டுகொள்ளாத நிலையில், அதைத் துப்பறிய ஆரம்பிக்கிறார் கண்ணாயிரம். அதைத் திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சிகளை மீறி, குற்றவாளியை கண்ணாயிரம் கண்டறிந்து டிடெக்டிவாக மாறினாரா என்பதுதான் மீதிக் கதை.
 
"ஸ்விட்ச் போட்டது போல நடிக்கிறார்கள்"
இந்தப் படம் குறித்து தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. தி இந்து நாளிதழின் இணைய தளம் இந்தப் படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
 
"படத்தில் ஒரு காட்சிகூட, ஒரு தருணம் கூட,ஒருவருடைய நடிப்பு கூட, 'படம் மோசமாக இருந்தாலும், இது நன்றாக இருந்தது' என்று சொல்லும் வகையில் இல்லை.
 
திரைக்கதை மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது. வசனங்கள் எல்லாம் தொலைக்காட்சித் திரைகளில் ஓடும் செய்திகளைப் போல, எவ்வித ஆழமும் இன்றி தகவலை மட்டும் தெரிவிக்கின்றன. அனைவரும் ஸ்விட்ச் போட்டதைப் போல நடிக்கிறார்கள்.
 
'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தின் மையம் வலுவானது. கடைசியாக தன் தாயின் உடலைக்கூட பார்க்க முடியாத ஒருவன், அடையாளம் தெரியாத சடலங்களைப் பற்றிய வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறான். அந்த மர்மத்தை விசாரிக்கும்போது அவனுக்கு ஒருவிதமான அமைதி கிடைக்கிறது.
 
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
ஒரு சிறந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருந்தால், படம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆன்மாவே இல்லாத, அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு படமாக முடிந்திருக்கிறது இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்" என்கிறது The Hinduவின் விமர்சனம்.
 
ஆனால், எதிர்பார்ப்பில்லாமல் சென்றால் ஒரு முறை ஏஜென்ட் கண்ணாயிரத்திற்கு கைகொடுத்துவிட்டு வரலாம் என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.
 
"ஏஜென்ட் கண்ணாயிரமாக இந்தப் படத்தில் சந்தானம் தன் பழைய பாணியிலான நடிப்பிலிருந்து சற்று விலகியிருக்கிறார். சில காட்சிகளில் அவருக்கே உரித்தான உடல்மொழி நகைச்சுவைகள் கைகொடுத்திருக்கின்றன.
 
"பொறுமைக்கு சோதனை"
துப்பறியும் கதை என்றாலே மிக வேகமான சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இப்படத்தினை நிதானமாக எடுத்திருக்கிறார்கள். முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் சில நல்ல காட்சிகள் இருந்தாலும் தொய்வான திரைக்கதை பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது" என்கிறது தினமணி.
 
மேலும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிதாக மனதில் நிற்கிறது. அதிக குளோசப் காட்சிகள் போன்றவற்றில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி, வேலை வாங்கியிருக்கலாம் என்கிறது தினமணி.
 
"நல்ல கதைதான், ஆனால்..."
 
Indian Express நாளிதழின் விமர்சனமும் இந்தப் படம் குறித்து எதிர்மறையான கருத்தையே முன்வைத்திருக்கிறது.
 
மனோஜ் பீதாவின் முதல் படமான வஞ்சகர் உலகமும் ஏஜென்ட் கண்ணாயிரமும் நல்ல கதைக் கருவைக் கொண்டிருந்தாலும் மோசமான திரைக்கதையாலும் இயக்கத்தாலும் சரியாக உருவாகவில்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
 
"காட்சிகள் எல்லாம் துண்டுதுண்டாகவும் தொடர்பில்லாமலும் இருக்கின்றன. இதையெல்லாம்விட மோசம், பல வசனங்கள் படமாக்கப்பட்ட பிறகு யோசனையில் உதித்து, பிறகு டப்பிங்கில் சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது. இதனால், நடிகர்கள் அவற்றைப் பேசுவதைப் போலவே இல்லை.
 
படத்தை ஸ்டைலிஷாக எடுக்க முயற்சித்திருப்பது மிகவும் போலித்தனமாக இருக்கிறது. அமெரிக்கத் த்ரில்லர் திரைப்படங்களில் வருவதுபோன்ற ஒரு கைவிடப்பட்ட வீட்டில் வசிக்கிறார் கண்ணாயிரம்.
 
அவருடை தந்தை, தன் மனைவி வாழ பணம் கொடுக்கமாட்டாராம். ஆனால், தன் குடும்பச் சொத்தான ஒரு துப்பாக்கியைக் கொடுக்கிறார்.
 
வேண்டுமென்றே ஹாலிவுட்தனமாக எடுக்க முயற்சித்ததைப்போல இருக்கிறது. அதுதான் நோக்கமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அதெல்லாம் சரியாகவே பொருந்தவில்லை.
 
ஆண்டன் செகோவின் துப்பாக்கி தியரிக்கு எதிரான ஒன்றை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் மனோஜ். அதாவது இந்தப் படத்தில் ஒரு துப்பாக்கி வருகிறது.
 
ஆனால், அது கடைசிவரை வெடிப்பதில்லை. இயக்குநர் பல விஷயங்களை முயற்சித்திருக்கிறார். ஆனால், எதுவும் மனதில் பதியவில்லை" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விமர்சனம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்