ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (15:32 IST)
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த சென்னை, கடலூர், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்த ராமு என்பவரின் மகன் விக்னேஷ்(வயது 23) ரஷ்ய நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு  எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் ஓல்கா ஆற்றுக்கு விக்னேஷ் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்களுடன் சென்ற நண்பர் எதிர்பாராத விதமாக நதியில் சிக்கிக் கொண்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற விக்னேஷ் உட்பட மேலும் மூன்று பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்த விக்னேஷ் குடும்பத்தினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
 
விக்னேஷின் சகோதரர் நிஷாந்த் கூறுகையில், "வோல்கோகிரேட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Volgograd State Medical University)  எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். அவர்கள் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அருகே ஓல்கா என்ற ஆறு இருக்கிறது. அந்த  ஆற்றுக்கு விக்னேஷ் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது இவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் ஆற்றில் இறங்கியபோது அவர் நீரில்  சிக்கிக்கொண்டார்.
 
இதையடுத்து அவரை காப்பாற்ற விக்னேஷ் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். ஆனால் ஆற்றில் மூழ்கிய நபரை காப்பாற்றும் முயற்சியில் அனைவரும் நீரில்  சிக்கிக்கொண்டனர். மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த மற்ற மாணவர்கள், இவர்களைக் காப்பாற்றச் சென்றால் ஆற்றில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் உள்ளே இறங்கவில்லை. பிறகு சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது," என்றார் நிஷாந்த்.
 
"இதையடுத்து அங்கு வந்த மீட்புப் படையினர், ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்களை மீட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் மீட்பதற்கு முன்பே  உயிரிழந்துவிட்டனர்" என்று நிஷாந்த் கூறினார்.
 
இதில், உயிரிழந்த விக்னேஷ் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்தவர். மேலும் மூன்று பேர், சென்னை. சேலம் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களின் குடும்பத்தினர், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், மாணவர்களின் உடலை இந்தியா கொண்டு வர கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்த இருக்கிறோம்," என்று நிஷாந்த் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், "எம்பிபிஎஸ் இறுதியாண்டு நிறைவு செய்து விட்டு இந்தியா வரவேண்டிய நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவர்களால் தாயகத்துக்கு வர முடியவில்லை. ஆகவே, பொது முடக்க கட்டுப்பாடுகள் முடியும் வரை அங்கேயே தங்கியிருந்த சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்" என்று வருத்தத்துடன் விக்னேஷின் சகோதரர்  நிஷாந்த் கூறினார்.
 
மேற்கொண்டு, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் அவர்களை தொடர்பு கொண்டபோது, "ரஷ்யாவில் உள்ள வோக்கோகிரேட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமு என்பவரது மகன் விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக மருத்துவம் படித்து வருகிறார்.  தற்போது இறுதியாண்டு படித்து வந்த அவர், ரஷ்யாவில் உள்ள ஓல்கா ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி மாணவர் விக்னேஷ் உயிரிழந்தார்," என்பதை  உறுதிபடுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்