35,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும் "ராட்சத யானை" வால்நட்சத்திரம்
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:36 IST)
இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில்லியன் டன்கள் என்று கண்டறிந்துள்ளது. இது 137 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.
ஆனால் இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அதிகபட்சமாக சூரியனில் இருந்து ஒரு பில்லியன் மைல் தொலைவுக்குத்தான் அது நெருங்கி வரும். அதுவும் 2031-ஆம் ஆண்டுக்குள் நடக்காது.
இந்த வால நட்சத்திரம் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் ஹபிள் தொலைநோக்கி அதன் அளவை உறுதிப்படுத்தியுள்ளது.
இது இதுவரை வானியலாளர்கள் பார்த்த அனைத்து வால் நட்சத்திரங்களை விடவும் இது மிகப்பெரியது.
"இந்த வால் நட்சத்திரம் பெரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கருதிவந்தோம். இப்போது அதை உறுதிப்படுத்தி இருக்கிறோம்" என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோள் அறிவியல் மற்றும் வானியல் பேராசிரியராக இருக்கும் டேவிட் ஜூவிட் கூறினார்.
இந்த வால் நட்சத்திரத்தை பெஹிமோத் எனப்படும் ராட்சதப் பனி யானையுடன் நாசா ஒப்பிடுகிறது. பூமியை நோக்கி இது பாய்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறது.
சிலியில் கூட்டு அமெரிக்க ஆய்வகத்தில் கறுப்பு ஆற்றல் பற்றி ஆய்வு செய்து வரும் பெட்ரோ பெர்னார்டினெல்லி, கேரி பெர்ன்ஸ்டீன் ஆகிய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தனர் என நாசா விண்வெளி அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
வால் நட்சத்திரம் என்பது என்ன?
வால் நட்சத்திரங்களை பனிக்கட்டி "லெகோ தொகுப்பு" என்று நாசா கூறுகிறது. இது கோள்கள் கட்டமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் எஞ்சியிருந்த பகுதிகளாகும்.
"சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள பெரிய கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை ஆட்டத்தின்போது சூரிய குடும்பத்தில் இருந்து அவை எதிர்பாராத விதமாகத் தூக்கி வீசப்பட்டன" என்று நாசா கூறுகிறது.
"வீசப்பட்ட வால் நட்சத்திரங்கள் சூரியக் மண்டலத்தைச் சுற்றியுள்ள ஊர்ட் மேகத் திரளில் இருக்கின்றன". ஊர்ட் என்பது சூரிய மண்டலத்தைச் சுற்றி பனியால் ஆன மேகம் இருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானியின் பெயர்.
தற்போது வால் நட்சத்திரம் எங்கேயிருக்கிறது?
மக்காவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மேன்-டு ஹுய் இந்த வால் நட்சத்திரத்தை "ஒரு அற்புதமான பொருள்" என்று வியக்கிறார்.
"வால் நட்சத்திரம் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்று நாங்கள் யூகித்தோம். ஆனால் இதை உறுதிப்படுத்த எங்களுக்கு சிறந்த தரவு தேவைப்பட்டது."
பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டைன் வால் நட்சத்திரம் முப்பது லட்சம் ஆண்டுகள் நீளமான நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணிக்கிறது. இதனால் சூரியனிலிருந்து தோராயமாக அரை ஒளியாண்டு தொலைவு வரை அது செல்லும்.
இப்போது இந்த வால் நட்சத்திரம் சூரியனிடம் இருந்து 200 கோடி மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ளது. இது நமது சூரிய மண்டலத்தின் தளத்துக்கு கிட்டத்தட்ட செங்குத்தாக விழுந்து கொண்டிருக்கிறது.