ஜெ. ராதாகிருஷ்ணன் பில் கிளிண்டன் பாராட்டை பெற்றது எப்படி? - புதிய சுகாதாரத் துறைச் செயலர் குறித்த 10 தகவல்கள்
வெள்ளி, 12 ஜூன் 2020 (14:53 IST)
தமிழக சுகாதாரத் துறைச் செயலராக இருந்த பீலா ராஜேஷுக்கு பதிலாக புதிய சுகாதாரத் துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த நியமனம் மிகவும் கவனம் பெற்றுள்ள நிலையில், ஜெ. ராதாகிருஷ்ணன் குறித்த 10 முக்கிய தகவல்கள் இவை.
1. தற்போது சுகாதாரத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெ. ராதாகிருஷ்ணன், 2012ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை தமிழக சுகாதாரத் துறைச் செயலராகச் செயல்பட்டவர்.
2. 1966ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியில் பிறந்த ஜெ. ராதாகிருஷ்ணன், பெங்களூரில் கால்நடை மருத்துவத்தை முடித்தவர்.
3. 1992ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த ஜெ. ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் துணை ஆட்சியராக தன் பணியைத் துவங்கி, நிதித் துறை துணைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், சேலம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் போன்ற பல பதவிகளை வகித்தவர்.
4. ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. அப்போது அவர் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
5. நாகப்பட்டினத்தில் சுனாமி நிவாரணப் பணியில் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வெகுவாகப் பாராட்டினார்.
6. சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு நடந்துவந்த சிசுக் கொலைகளைத் தடுக்க இவர் எடுத்த முயற்சிகள் பாராட்டுகளைப் பெற்றன.
7. 2009-2012ல் இந்தியாவில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பேரிடர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பிறகு மீண்டும் மாநிலப் பணிக்குத் திரும்பியவர், 2012ல் சுகாதாரத் துறை மற்றும் நல்வாழ்வுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
8. இவர் சுகாதாரத் துறைச் செயலராக இருந்த காலகட்டத்தில் டெங்கு நோய்த் தடுப்பு, சென்னைப் பெருவெள்ளத்தைத் தொடர்ந்த நோய்ப் பரவல் தடுப்பு ஆகியவற்றில் இவரது பணிகள் கவனிக்கப்பட்டன.
9. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம் போன்றவர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இவரை விசாரிக்க வேண்டுமென அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
10. இந்தப் பிரச்சனையின் முடிவில் 2019 பிப்ரவரியில் சுகாதாரத் துறையில் இருந்து மாற்றப்பட்ட ஜெ. ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார்.