இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன் பின் அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
ஏற்கனவே இரண்டு அணிகளாக உலா வரும் அதிமுகவில், தினகரன் புதிதாக மற்றொரு அணியை உருவாக்க முயன்ற விவகாரம் மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இதுகுறித்து அவரை மத்திய அரசு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று முன் தினம் இரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் டெல்லிக்கு செல்லவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, தொடர்ந்து தனக்கு நெருக்கடி கொடுத்து வரும் மத்திய அரசை சரிகட்ட முடிவெடுத்த தினகரன், மத்திய அரசுக்கும், மன்னார்குடி வட்டாரத்திற்கும் இடையே நெருக்கமாகவும், பாலமாகவும் உள்ள கேரள அரசியலில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரை சந்திக்க அவர் கேரளா சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.