உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. மேலும், நடுவர் மன்றம் தீர்ப்பை அமுல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து கட்சிகளும் இணைந்து, இதுகுறித்து நேரில் பிரதமரை வலியுறுத்த, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் “அரசியல் ஆதாயத்திற்காக திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. முதலில் திமுக, அவர்களின் கூட்டணி கட்சிகளை அழைத்து பேச வேண்டும். இந்த சூழ்நிலையில் இந்த கூட்டம் தேவையில்லை” என்று கூறினார்.