அதிமுக - பாஜக கூட்டணி? ஓபிஎஸ்-ஐ அடுத்து ஈபிஎஸ் சூசக தகவல்!!
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (10:54 IST)
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி தற்போது இணைந்துள்ளது. இவர்களுக்கு எதிராக தினகரன் தரப்பு அணி பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரயும் இயக்குவது மத்திய பாஜக ஆட்சிதான் என்று மறைமுகவாவும் பகிரங்கமாகவும் பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் நிலையில், தமிழக அரசியலில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் பாஜக-விற்கு இந்த கூட்டணி அமைப்பு சாதகமானதாகவே இருக்கும்.
சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார்.
மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்று அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்போது துணை முதல்வராகவுள்ள ஓபிஎஸ் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.
தற்போது இவை அனைத்திற்கு உயிர்யூட்டுவது போல பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணைஉஅம் முனைப்பு காட்டி வரும் நிலையில், முதல்வரின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது.