எடப்பாடியோடு இணையும் ஓ.பி.எஸ்? ; ஐவர் கொண்ட குழு?- தினகரன் அதிர்ச்சி

ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (16:32 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும், ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஐவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தினகரனின் செயல்பாடுகளால் ஆட்சியை பறிகொடுத்து விடுவோம் என்கிற பயத்திற்கு சில அமைச்சர்கள் வந்திருப்பதாகவும், அதனால் தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் அவர்கள் ரகசியமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தார். அதன் பின் அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன்.  
 
என்னதான் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும், அவரை பின்னால் இருந்து தினகரனே இயக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான்தான் நிற்பேன் என அங்கு போட்டியிட்டார் தினகரன். ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரண் அணி பணப்பட்டுவாடா செய்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலும் ரத்தானது. 
 
மேலும், வருமான வரித்துறையினரின் லிஸ்டில் முதல்வர் உட்பட தமிழக முக்கிய அமைச்சர்கள் பெயர் இருக்கிறது. அடுத்த சோதனை எங்கு நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என தமிழிசை உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

 
எனவே, இப்படியே போனால் ஆட்சி கை விட்டு போய்விடும்.  மேலும், அடுத்த முறை அதிமுக வெற்றி பெறுமா எனக் கூறமுடியாது எனக் கருதிய சில அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக களம் இறங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 14ம் தேதி காலை அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவாறு உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் கசிந்தன. 
 
‘மேற்கு மாவட்டத்தை’ சேர்ந்த அமைச்சர் ஒருவர் தான் இது குறித்து அந்த கூட்டத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார். உங்களோடு அதிகப்படியான தொடர்பில் இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரெய்டு போனாங்க. அவரால் இன்று கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வந்துவிட்டது என கூறியிருக்கிறார். மேலும் விஜயபாஸ்கரை இப்போதைக்கு அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நம்மீது இருக்கும் கெட்டப்பெயரை மாற்ற முடியும். இந்த நேரத்தில் நீங்களும் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினால் அது கட்சிக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்று கூறி தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவரை தினகரன் சமாதானம் செய்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஆட்சியை தக்க வைக்க முடிவெடுத்த சில மூத்த தலைவர்கள், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஓரம் கட்டும் திட்டங்களை தீட்டி வருவதாக தெரிகிறது. அப்படி நடந்தால், ஓ.பி.எஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அப்போது இரட்டை இலை சின்னமும் கைக்கு வந்து விடும் என அவர்கள் நம்புவதாக தெரிகிறது. ஆனால், அப்படி நடந்தால் தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார் என்பதால், அதை  எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.


 

 
இதற்காக ஓ.பி.எஸ் அணியில்  உள்ள முக்கிய நபர்களும், தற்போது தினகரன் பக்கம் இருக்கும் சில முக்கிய மூத்த அமைச்சர்களும் இணைந்து ஐவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக் தெரிகிறது. அந்த குழுவில் தம்பித்துரை, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. 
 
தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயன்றால், கண்டிப்பாக பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த அணிக்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே, சுலபமாக ஆட்சியை பிடித்து ஒன்றாக இயங்கலாம் என அவர்கள் கணக்குப் போடுவதாக தெரிகிறது.
 
இதன் மூலம் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்