ஓ.பி.எஸ். ராஜினாமாவை சட்டப்படி திரும்பப் பெற வாய்ப்பில்லை: கி.வீரமணி

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (08:56 IST)
ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சட்டப்படி திரும்பப் பெற வாய்ப்பில்லை என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


 

இதுகுறித்து அவர் சனிக்கிழமையன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. தமிழகத்தின் ஆட்சி, நிர்வாகத்தை ஸ்தம்பித்து போகச்செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதும், அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதும் தான் ஆளுநரின் வேலை. சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக விரோதம்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சட்டப்படி திரும்பப் பெற வாய்ப்பில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தை நிர்ப்பந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருந்தால் அது தொடர்பாக ஆளுநரே விசாரணை நடத்தலாம் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு உரிமையுண்டு.

ஆனால், பெரும்பான்மை உள்ளவர்களை நிரூபிக்க சொல்லாமல் ஆளுநர் தயக்கம் காட்ட என்ன காரணம்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நேரடியாக தமிழகத்தில் காலூன்ற முடியாத சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356வது சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்