மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் அங்கு போட்டியிட தயக்கம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
ஏனெனில், அங்கு போட்டியிட்டு, தோல்வியுற்றாலோ, ஒபிஎஸ் அணியை விட குறைந்த வாக்கு வாங்கினாலோ அவரது அரசியல் வாழ்க்கைக்கு அது இடையூறு ஏற்படுத்தும் என அவரது நெருங்கிய நண்பர்கள் எச்சரிக்கின்றனராம். மேலும், அந்த தொகுதியை சார்ந்த கட்சியினரும் போட்டியிட ஆர்வம் காட்ட மறுப்பது மேலிட நிர்வாகிகளை கவலை கொள்ள செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, சசிகலா தரப்பில் வேறு யாரேனும் அங்கு போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.