சென்னையில் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் : களை கட்டும் அரசியல்

புதன், 11 ஜனவரி 2017 (11:23 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும், சில அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்கள்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்வார் எனத் தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது. 
 
அதில் பலர் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் தீபா பேனர், போஸ்டர் என களை கட்டுகிறது. சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டு வருகிற 17ம் தேதி தனது அரசியல் பயணம் தொடரும் என தீபாவும் அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில், தீபாவின் ஆதரவாளர்கள் சென்னை, நங்கநல்லூரில் உள்ள கே.சி.டி. திருமண மண்டபத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்கள். அதில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தீபாவின் ஆதரவாளர்களும், வெளிமாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
 
தீபாவின் ஆதரவாளர்கள் வெளி மாவட்டங்களில் மட்டுமே இதுவரை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னையிலும் அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தப்படுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்