சசிகலாவிற்காக கூடும் பெண்கள் ; தலைக்கு ரூ.200 : கூலிக்கு ஆள் பிடிக்கும் அதிமுகவினர்
சனி, 7 ஜனவரி 2017 (10:36 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வந்து செல்லும் இடங்களில் கூட்டத்தை கூட்டுவதற்கு, கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக அரசியல் கூட்டத்திற்காக, ஒரு முக்கிய தலைவர் அல்லது அமைச்சர்கள் கலந்து கொள்ள வரும் போது, அங்கு மக்கள் கூட்டத்தை காட்டி தங்கள் விசுவாசத்தை காட்ட, அந்த பகுதி நிர்வாகிகள் கூலிக்கு ஆள் பிடிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் அரசியல் நடைமுறைகளில் ஒன்று.
அதுபோல் சசிகலா வரும் இடங்களில் மக்கள் கூட்டம் குறிப்பாக பெண்கள் கூட்டத்தை கொண்டு வந்து நிறுத்துவதற்கு, கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஒரு பிரபல தின பத்திரிக்கை, புகைப்படங்களுடன் கூடிய ஆதாரத்தோடு இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட மக்கள், சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது தலைமையில் அதிமுக செயல்படுவதை பொதுமக்கள் மட்டுமின்றி, அதிமுக அடிமட்ட தொண்டர்களே விரும்பவில்லை. எனவே, சசிகலாவிற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் சசிகலாவின் உருவப்படம் உள்ள பேனர்கள், போஸ்டர்கள் களை கட்டி வருகின்றன.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளை சசிகலா சந்தித்து பேசி வருகிறார். வழக்கமாக ஜெயலலிதா தலைமை அலுவலகம் வரும் போது அவரை காண்பதற்காக பெண்கள் கூட்டம் குவியும். ஆனால், சசிகலாவிற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. எனவே யாரும் அங்கு செல்வதில்லை.
எனவே, தலைக்கு ரூ.200 கொடுத்து பெண்கள் அங்கே அழைத்து வரப்படுகிறார்கள். அதில் சிலர் ரூ.200 போதாது, மேலும் வேண்டும் என்று சண்டையிடும் காட்சிகளும் அரங்கேறுகின்றனவாம். அப்படி அழைத்து வரப்படும் பெண்கள், சசிகலா வரும் போது கட்சி அலுவலகத்தின் உட்புறம் வரிசையில் நிறுத்தப்படுகின்றனர். அதன் பின் முதல் மாடிக்கு சென்று பால்கனியில் நின்று அனைவருக்கும் இரட்டை விரலை காட்டி கையசைத்து விட்டு உள்ளே சென்றுவிடுவார் சசிகலா. அதன் பின் அந்த பெண்கள், அலுவலகத்திற்கு வெளியே அமரவைக்கப்படுகின்றனர். அதில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளாக உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.