விலை நிர்ணயம் மட்டுமே உற்பத்தியை பெருக்கிடாது: வேளாண் ஆணையம்

புதன், 2 மார்ச் 2011 (20:08 IST)
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதால் மட்டுமே வேளாண் உற்பத்தி பெருகிடாது என்றும், பாசன வசதி, நீர்தேக்க வசதி, நல்ல விதைகள் ஆகியனவும் மிக முக்கியமானது என்று வேளாண் விளைபொருட்களுக்கான செலவு மற்றும் விலை நிர்ணயித்திற்கான வேளாண் ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

1965ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வேளாண் ஆணையம் (Agriculture commission for Costs and Prices - CACP) சட்டபூர்வமான அமைப்பாகும். வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்து அரசுக்கு தெரிவிக்கிறது இந்த ஆணையம்.

டெல்லியில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய இந்த ஆணையத்தின் தலைவர் அசோக் குலாத்தி, “வேளாண் உற்பத்திக்கு விலை நிர்ணயம் ஒரு முக்கியமான கருவியாகும். ஆனால் விலை மட்டுமே வேளாண் உற்பத்தியை பெருக்கிடாது. அதற்கு நல்ல விதைகளும், நீர் தேக்கும் மற்றும் பாசன வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால்தான் ஆண்டிற்கு 4 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி சாத்தியமாகும் என்று அசோக் குலாத்தி கூறியுள்ளார்.

2007 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஆண்டிற்கு 4 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டை விட 5.4 விழுக்காடு வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்