முல்லைப் பெரியாறு அணையில் ஒழுகல் அளவிற்கு உட்பட்டதே: ஆய்வுக் குழு விவரம் சேகரிப்பு

வியாழன், 23 டிசம்பர் 2010 (16:48 IST)
முல்லைப் பெரியாறு அணையில் நீர் ஒழுகல் (Seepage) தொடர்பான ஆய்வை மேற்கொண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவிடம், நீர் ஒழுகல் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டுள்ளது என்கிற விவரத்தை தமிழக பொதுப் பணித் துறையினர் வழங்கியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, அணையின் நீர்மட்டத்தை 132.2 அடிக்கு உயர்த்தி, நீர் ஒழுகலை கண்காணிப்பதற்கான சுரங்க வழியில் சென்று கணக்கீடு செய்து பதிவு செய்தது. அப்போது நிமிடத்திற்கு 60 லிட்டர் அளவிற்கு நீர் ஒழுகல் (Seepage) இருந்தது.

அணையின் நீர்மட்டத்தை 135.1 அடிக்கு உயர்த்திப் பார்த்ததில் நீர் ஒழுகல் அளவு நிமிடத்திற்கு 58.46 அடியாக இருந்தது. இவை யாவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மிக மிக குறைவானதாகும். ஒரு அணையின் ஒழுகலினால் வெளியேறும் நீரின் அளவு நிமிடத்திற்கு 250 லிட்டர்கள் அளவிற்கு இருந்தால் மட்டுமே அணையின் நிலைத்தன்மை தொடர்பான ஐயம் எழ வாய்ப்புள்ளது. அப்போதும், அது அணையின் செய்ய வேண்டிய பராமரிப்பையே வலியுறுத்துகிறது என்று கட்டமைப்பு பொறியாளர்கள் (Structural Engineers) கூறுகின்றனர்.

எனவே, மத்திய நீர்வள ஆணையத்தின் பொறியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் ஆய்வு செய்ததில் அணையின் நிலைத்தன்மை உறுதியாக உள்ளது என்பதை ஆய்வுக் குழுவினர் முடிவு செய்யக் கூடிய அளவிலேயே உள்ளது. இது தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணையில் ஏற்படும் ஒழுகலை பெரிதாக்கியே பெரியாறு அணை பலவீனமானதாக உள்ளதென்றும், அதனை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு கூறிவருகிறது.

2009ஆம் ஆண்டிலேயே மத்திய அணை பாதுகாப்பு இயக்ககம் (Dam Safety Directorate) இரண்டு முறை அணையை சோதனை செய்து, அதன் உறுதித் தன்மை தொடர்பாக அளித்த அறிக்கையை தமிழக பொதுப் பணி்த் துறை முதன்மை பொறியாளர் எஸ்.இராமசுந்தரம் மத்திய நீர் வள ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் பொ.ப.து. பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்