ஜூலை மாதம் 7ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வங்க கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்க கடலோர மாவட்டங்களில் ஜூலை 8ஆம் தேதி முதல் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வானிலை கணிப்பின்படி, ஆந்திரா, கர்நாடகா, வடக்கு கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும், இந்தியாவின் மத்திய கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான இடங்களிலும் ஜூலை 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதே பகுதிகளில் ஜூலை 22 முதல் 28 வரை மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான வட மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரையும் 13 முதல் 17ஆம் தேதி வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிக அளவிலும், அரபி கடல் பகுதியில் மழையின் தாக்கம் குறைவாகவும் காணப்படுவதால் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பு மழையும், பெரும்பாலான மாவட்டங்களில் சற்று குறைவாகவும் பெய்யும் வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழையும், இதர மாவட்டங்களில் சராசரி மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஒரிஸாவிலும், கர்நாடாகாவில் கன்வார், கார்வார், மங்களூர் உள்பட பெரும்பாலான பகுதிகளிலும் இயல்பைவிட கூடுதல் மழையும் ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஜூலை 9ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.