தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் - மழைராஜ்

புதன், 1 ஜூன் 2011 (16:23 IST)
கேரளாவில் துவங்கியுள்ள தென் மேற்கு பருவ மழை ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த மே 14ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மே 27 முதல் தென்மேற்கு பருவ மழை துவங்கும் எனத் தெரிவித்திருந்தேன். மே 27ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகாவில் பருவ மழை பெய்யத் துவங்கியுள்ளது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மே 30ஆம் தேதி வானிலை கணிப்பின்படி அரபிக் கடல் பகுதியில் தெற்கு கர்நாடகாவை மையமாகக் கொண்டும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரியை மையமாகக் கொண்டும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை அதிகபட்ச மழையாக தெற்கு கர்நாடகாவில் மங்களூர், மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகயில் பதிவாக வாய்ப்புள்ளது. கார்வார், பீஜப்பூர், ரெய்ச்சூர், பகல்கோட் உள்ளிட்ட கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் இயல்பைவிட கூடுதல் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

மேலும் கேரளாவில் கோழிக்கோடு, கணுணூர் பகுதியில் அதிகபட்ச மழையும், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பைவிட கூடுதல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவைப் பொறுத்தவரை மச்சிலிப்பட்டிணம், விசாகப்பட்டிணம், கம்மம், குண்டூர், ஹைதராபாத், சித்தூர் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நிலகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்ய வாயப்புள்ளது. குறிப்பாக கொடைக்கானல், குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 1 முதல் 5 வரை கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உட்பட வட தமிழகத்திலும், அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் ஜூன் 2 அல்லது 6ஆம் தேதி பலத்த நிலநடு‌க்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்