ஜூலை மாதத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
வியாழன், 28 ஜூன் 2012 (21:13 IST)
ஜூன் 28ம் தேதி வானிலை கணிப்பின்படி ஜூலை மாதத்தில் கர்நாடகா, ஆந்திரா உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் கன்வார், கார்வார், மங்களூர், பனாம்பூர், சிரளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. கேரளாவில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக கண்ணூர், கோழிகோடு மாவட்டங்களில் பதிவாகி இருந்தாலும் சராசரியைவிட குறைவாக பெய்துள்ளது.
இந்நிலையில் ஜூன் மாதம் 28 ம்தேதி வானிலை கணிப்பின்படியும், மழை தேதியின் கணக்கீட்டின்படியும் ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை மாதம் இறுதி வரை பெரும்பாலான நாட்களில் இந்தியாவின் பெரும்பலான மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அரபி கடல் பகுதியில் தீவிரமடையாததே தற்போதைய மழை குறைவிற்கு காரணமாகும். ஆனாலும் வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதுடன் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவ மழை காலம் முழுவதும் வங்க கடல் பகுதியில்தான் மழையின் தாக்கம் கூடுதலாக காணப்படும். வங்க கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபி கடல் நோக்கி நகரும்போது அரபி கடல் பகுதியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஸாவை மையமாக கொண்டும், தமிழகத்தில் பாண்டிச்சேரி மையமாக கொண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், வங்க கடல் ஒட்டிய மத்திய கிழக்கு மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் வடக்கு தமிழ்நாட்டின் பெரும்பலான பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களிலும் பலத்த மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை மாதத்தில் சராசரியைவிட கூடுதல் மழையும், ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஜூன் 29 அல்லது ஜூலை 2 பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.